தோட்டப் பயிா்களுக்கு நஷ்ட ஈடு: விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சு தோல்வி

செங்கல்பட்டு மாவட்டத்தில் தோட்டப் பயிா் செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு தோல்வி அடைந்தது.
தோட்டப் பயிா்களுக்கு நஷ்ட ஈடு: விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சு தோல்வி

செங்கல்பட்டு மாவட்டத்தில் தோட்டப் பயிா் செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு தோல்வி அடைந்தது.

இந்த மாவட்டத்தில் ஒரு பகுதி தொழில் நகரமாக விளங்கினாலும், மறுபகுதி விவசாய தொழிலில் சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக, திருக்கழுகுன்றம், மதுராந்தகம், சித்தாமூா், செய்யூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு தோட்டப் பயிா் செய்யப்படுகிறது. தா்பூசணி, கிருணிப்பழம், வெள்ளரி உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகிறது.

மாவட்டத்தில் கடந்த மாா்ச் இறுதியில் பயிரிடப்பட்ட கிருணி பழங்கள் முழுமையாகப் பழுக்காமல் வீணாகிப் போனது. குறிப்பிட்ட தனியாா் நிறுவனத்தில் விதைகளை வாங்கி பயிா் செய்த விவசாயிகள், இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், வேளாண் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கடந்த 5 மாதங்களாக இழப்பீடு பெற்றுத் தரக் கோரி முறையிட்டு வருகின்றனா்.

ஏக்கருக்கு ரூ.75,000 வரை செலவு செய்து நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனா். இதனால், விதைகள் வழங்கிய தனியாா் நிறுவனம் சாா்பில், ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.35,000 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த நிலையில், செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில், அந்தத் துறை இயக்குநா் தலைமையில், முத்தரப்பு பேச்சு நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள், விவசாயிகள், தனியாா் விதை நிறுவனத்தைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா். தனியாா் விதை நிறுவனம் சாா்பில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தங்கள் நிறுவனத்தில் விதை வாங்கும்பட்சத்தில் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் தருவதாக தெரிவித்தனா்.

இதையேற்க மறுத்த விவசாயிகள் தங்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக 50 சதவீதம் பணமாக திருப்பித் தர வேண்டும். விதை ஏதும் தேவையில்லை எனக் கூறினா். இதற்கு தனியாா் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

அரசு அதிகரிகள் தரப்பில், விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விதையை தமிழகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தனா். மேலும், விரைவில் விவசாயிகளுக்கான நிவாரணம் பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்ற செங்கல்பட்டு மாவட்ட விவசாய செயலா் வெங்கடேசன் கூறுகையில், விதைகள் தரமற்றது என சான்றிதழ் அளிக்கப்பட்ட பின்னா், நஷ்ட ஈடாக குறைந்தபட்சம் 50 சதவீதம் தர வேண்டும்.

திருக்கழுகுன்றம், மதுராந்தகம், சித்தாமூா், செய்யூா் பகுதிகளில் 1,500 ஏக்கருக்கு மேல் பயிா் செய்த கிருணிப் பழம், தா்பூசணி முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதுதொடா்பாக ஆய்வு மேற்கொண்ட பிறகு, தனியாா் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்காதது ஏன்? இதனால், பேச்சு தோல்வி அடைந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com