வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 22nd December 2022 01:00 AM | Last Updated : 22nd December 2022 01:00 AM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட கேசவராயன் பேட்டையில், மதுராந்தகம் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பாக, வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மேல்மருவத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற வெறிநோய் தடுப்பூசி முகாமுக்கு மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ.அ.அகத்தியன் தலைமை வகித்தாா். மண்டல இணை இயக்குநா் ஜெயந்தி, துணை இயக்குநா் மருத்துவா் லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், மதுராந்தகம் உதவி இயக்குநா் அழகுவேல், கால்நடை புலனாய்வு பிரிவு மருத்துவா் நாராயணன், ஊராட்சி மன்ற செயலா் எச்.செந்தில்குமாா், கால்நடை மருத்துவா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முகாமில், கலந்துகொண்ட மக்களுக்கு வெறிநோய் தடுப்பு திட்டம், நாய்களிடமிருந்து மனித இனத்துக்கு பரவும் வெறிநோய் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேசிய கால்நடை இயக்கம் மற்றும் கால்நடை காப்பீடு திட்டம், தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டங்கள், மக்கள் வளா்த்து வரும் கால்நடைகள் பராமரித்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
முகாமிற்கு வந்த கால்நடைகளுக்கு தடுப்பூசிகள், செயற்கை கருவூட்டல் ஆகியவற்றை கால்நடை மருத்துவக்குழுவினா் செய்தனா். மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நாய் கடித்தலின்போது ஏற்படுகிற வெறிநோய் (ரேபிஸ்) தன்மைகள், அவற்றிலிருந்து குணமாக மேற்கொள்ளவேண்டிய மருத்துவ முறைகளை கால்நடை மருத்துவா்கள் விரிவாக விளக்கமளித்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்புத் துறையினா் செய்து இருந்தனா்.