செங்கல்பட்டில் போகிக்குத் தயாராக இருக்கும் மேளங்கள்

போகிப் பண்டிகையையொட்டி செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் புறவழிச்சாலையில் உள்ள அருந்ததிபுரத்தில் மொத்த விலைக்கு போகி மேளம் தயாராக உள்ளது.
செங்கல்பட்டில் போகிக்குத் தயாராக இருக்கும் மேளங்கள்

போகிப் பண்டிகையையொட்டி செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் புறவழிச்சாலையில் உள்ள அருந்ததிபுரத்தில் மொத்த விலைக்கு போகி மேளம் தயாராக உள்ளது.
தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான மார்கழி தனூர் மாதத்தின் கடைசி நாளை வழி அனுப்பு நாளாக போகி பண்டிகை கொண்டாடப்படும். போகிபண்டிகையில் பழையன கழித்தும் புதியன புகுத்தும் நாளாக பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி வீட்டை சுத்தம் செய்து புதுப்பொலிவுடன் வைத்திருக்க பழைய பொருள்கள் பழைய துணிகளை விடியற்காலை தீயிலிட்டு எரித்து போகி மேளம் அடித்து கொண்டாடி மகிழ்வர். 
அதன் தாத்பரியம் வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை அகற்றுவது மட்டுமல்லாமல் நம்மனதில் தேவையற்ற சிந்தனைகள், தீய எண்ணங்கள், கடந்தகால கசப்பான அனுபவங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை என எல்லாவற்றையும் நீக்கி தீயிலிட்டு கொளுத்தி புதுவாழ்வுடன் புத்துணர்வுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டி கொண்டாடுவர். நம் வீட்டின் முன்பு வண்ண வண்ண கோலமிட்டு சாணத்தில் பூசணி வைப்பர். வீட்டின் கூரையில் பூலான்பூ செருகப்படும். மார்கழி பீடைமாதத்தை முடிந்ததாகவும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீங்கி விட்டதாக நினைத்து நீராடி போகி பண்டிகையின் போது இந்திரன் உள்ளிட்ட இறைவனை பூஜித்து திருப்தி படுத்தும் விதமாக போளி, வடை பாயத்துடன் வழிபாடு செய்வது வழக்கம்.

மார்கழி கடைசி நாளில் விடியற்காலை பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையின் போது, அதிகாலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழைய பொருள்களை தீயில் எரித்து சுற்றி நின்று மேளம் கொட்டி ஓசை எழுப்பி கொண்டாடி மகிழ்வர். சிறு பறை என்றழைக்கப்படும் இந்த போகி மேளம் தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 
இதன் தயாரிப்பு முறை குறித்து அருந்ததிபுரத்தைச் சேர்ந்த விற்பனையாளர் ரமணி மாத்தையா கூறியது, மாட்டுத் தோல் வியாபாரிகளிடம் இருந்து தோல் வாங்கப்பட்டு, மாட்டுத் தோலில் இருந்து ஜவ்வைப் பிரித்து சுண்ணாம்பு நீரில் மென்மையாகும் வரை ஊற வைத்து சுத்தம் செய்யப்படும். பின்னர், மண் பாண்டத் தொழிலாளர்களிடம் இருந்து வாங்கி வைத்த கந்திரி எனப்படும் மண்ணாலான மண்வட்டில் மீது பசையிட்டு தோல் ஒட்டி காய வைக்கப்படும். அதன்பின் தோலின் மென்மைக்கு ஏற்றவாறு ஓசை இருக்கும். மேளம் தயாரிக்க தேவைப்படும் தோல், சுண்ணாம்பு, கந்திரி என்கின்றமண்வட்டில் உள்ளிட்ட மூலப் பொருள்களை வாங்க அந்தந்த உரிமையாளர்களிடம் முன்கூட்டியே பணத்தை செலுத்தி விடுவோம். 


ஆண்டுக்கு ஒருமுறை தயாரிக்கப்படும் இந்த போகி மேளத்தின் விற்பனை அண்மை காலமாக சூடுபிடிக்கவில்லை. சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இத்தொழிலையே நம்பி வாழ்ந்து வருகிறோம். பிளாஸ்டிக் பொருள்களால் உடுக்கை, டிரம்ப்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களிலும், நிறங்களில் மேளம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் பாரம்பரியமாக போகிப் பண்டிகையைக் கொண்டாடுவோர் இங்கு தயாரிக்கப்படும் போகி மேளத்தை தேடிவந்து வாங்கிச் செல்கின்றனர். இதுபோன்று ஆதரவு தருவோரால் தான் எங்களால் இத்தொழிலை தொடர்ந்து செய்ய முடிகிறது. 
சென்னையில் தான் மேளம் செய்தற்கான தோலை மே மாதமே வாங்கி பதப்படுத்தி தொழில் ஈடுபட்டு மேளம் செய்வோம். ஆனால் 2020ல் தொடர் பொதுமுடக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்ததை அடுத்து இதுவரை தொழில் செய்வது கடினமாகவே உள்ளது. அந்த நேரத்தில் தோல்களை வாங்க போக்குவரத்தின்றி பெரும் அவதிக்குள்ளாகி காலம் தாழ்த்தி தளர்வுக்கு பிறகே தோல் வாங்கி வந்து செய்து காயவைக்கவும், நிவர்புயல், மழை என வந்து காயவைக்கவே சிரமத்திற்குள்ளாகினோம். மேளங்கள் காயவைக்கமுடியாமல் 4ல் ஒரு பங்கு மேளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்தது. அதனால் எங்களுக்கு அந்த ஆண்டு பெரும் நஷ்டம்தான். ஆனால் செய்து வந்தது விற்றால் போதும் என்ற நிலை இருந்தது. 2021ல் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தொடர்மழையில் மேளம் தயாரிப்புப் பணி முடங்கியது. 
இருந்தும் வயிற்றுப்பாட்டுக்காக சமாளித்து போகி மேளம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை சேகரித்து போகி மேளம் தயார்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சென்னையில் இருந்து மொத்தமாக விற்பனைக்காக வாங்கவரும் வாடிக்கையாளர்களும் எதிர்பார்த்த அளவில் வாங்கவில்லை. ஒருமேளம் ரூ 23க்கும் வியாபாரிகளுக்கு விற்கிறோம். அவர்கள் ரூ.40முதல் ரூ,50 வரை விற்பனை கின்றனர். இருந்தாலும் பிளாஸ்டிக் மேளங்களை வந்தாலும் பாரம்பரிய மேளத்தின்விலையை மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். 
மேலும் டீசல் விலையும் ஏரியதால் வானங்களில் ஏற்றிச்செல்பவர்கள் அடிமாட்டுவிலைக்கு கேட்கின்றனர். அதனால் செய்து வைத்த மேளம் லாபம் கிடைக்கவில்லை என்றாலும் தேங்கி விடக்கூடாது என்பதால் கேட்ட விலைக்கு கொடுத்து காலிசெய்வதற்ககு தயாராக இருக்கிறோம். ஆண்டுதோறும் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மேளங்கள் செய்வார்கள் இந்த ஆண்டு குறைந்த அளவிற்கே தயார் செய்துவைத்தும் இன்றும் வியாபாரிகள் வந்து வாங்கவில்லை என வேதனை தெரிவித்தனர். 
மேலும் இத்தொழிலைக் காக்கவும் சமுதாயத்தில் இத்தொழில் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு உதவித்தொகை கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் நலிவுற்ற நிலையில் உள்ள எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com