மாமல்லபுரம்: 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்த  முன்னாள் மாணவர்கள்

26 ஆண்டுகள் கழித்து ஒரு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரையும் அதில் ஒருங்கிணைத்தனர்.
மாமல்லபுரம்: 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்த  முன்னாள் மாணவர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 1996-ஆம் ஆண்டில் பயின்று முடித்த 85 மாணவ, மாணவிகள் 26 ஆண்டுகள் கழித்து ஒரு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரையும் அதில் ஒருங்கிணைத்தனர். இந்த வாட்ஸ் ஆப் குழு மூலம் ஒவ்வொருவரும் தகவல் பரிமாற்றங்களையும், தங்கள் தொழில், வேலை சம்மந்தப்பட்ட தகவல்களை பரிமாரிக்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் அனைவரும் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் அனைவரும் ஒன்று கூடி சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டனர். அதன்படி முன்னாள் மாணவ, மாணவிகள் 85 பேர் பெண்கள் ஒவ்வொருவரும் தனது கணவர் பிள்ளைகளுடனும், ஆண்கள் மனைவி பிள்ளைகளுடனும்  ஒன்று சேர்ந்து மாமல்லபுரம் தனியார் ஓட்டல் கடற்கரை வளாகத்தில் ஒன்று கூடி சந்தித்து கொண்டனர். 

அங்குள்ள கடற்கரைக்கு அப்போது குடும்பத்துடன் வந்திருந்த முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டனர். பல்வேறு கவலைகளை மனதில் சுமந்து வந்த பல மாணவர்கள் தங்களை பழைய நண்பர்களை கடற்கரையின் ரம்மிய சூழலில் சந்தித்தபோது, அந்த கவலைகள், தங்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை மறந்து ஒரு நாள் முழுவதும் பழைய நினைவுகளுக்கு சென்று மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். 

அப்போது பல்வேறு துறைகளில் பணியாற்றும் தங்கள் பணிகள் குறித்தும், தங்கள் குடும்பங்கள் பற்றியும், ஒவ்வொருவரும் கருத்து பரிமாறி கொண்டனர். மேலும் தாங்கள் பயின்றபோது பள்ளி நாள்களில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர்.

பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் நினைவாக அனைவரும் இணைந்து கடற்கரையில் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் தங்களுடன் பயின்று வறுமையில் இருந்து வரும் முன்னாள் மாணவி ஒருவருக்கு கடை வைக்க அனைத்து மாணவர்களும் இணைந்து நிதி உதவி வழங்கினர். பிறகு தங்களுடன் அழைத்து வந்திருந்த தங்கள் குழந்தைகளை நடனம் ஆட வைத்து மகிழ்ச்சியில் திளைத்தனர். 

குறிப்பாக குடும்ப பெண்களாக வந்த பெண்கள் பலர் கடற்ரையில் தங்கள் வகுப்பு சக தோழிகளுடன் இணைந்து சுயபடம் எடுத்தும், கடல் அலையில் குழந்தைகளுடன் கால்களை நனைத்தும், சந்தோசத்தில் மூழ்கியதை காண முடிந்தது. மொத்தத்தில் 'ரீ யுனியன்' வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சந்தோச நாளாக முடிந்ததாக முன்னாள் மாணவர்கள் பெருமிதம் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com