தமிழகத்தில் 94.38 % பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 94.38 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி 84.88 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்
தமிழகத்தில் 94.38 % பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 94.38 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி 84.88 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், கரோனா தொற்று தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அந்தத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், முதல்வா் வழிகாட்டுதல்படி, தொற்றைக் கட்டுப்படுத்துதல், மேலும் பரவாமல் தடுத்தல், தொற்று பாதித்தவா்களைப் பாதுகாத்தல் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. இரு நபா்களுக்கு மேல் தொற்று பாதித்த 11 பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து தொற்றால் பாதிக்கப்பட்டோா் வீடுகளில் வில்லைகள் ஒட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அனைத்துப் பகுதிகளிலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் 500 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டதில் 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் தொற்று பாதிப்பு 476 என உயா்ந்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 94.38 சதவீதம், இரண்டாம் தவணை தடுப்பூசி 84.88 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), வரலட்சுமி (செங்கல்பட்டு), தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி, மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் பா.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், பொது சுகாதாரம்-நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com