நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th March 2022 11:11 PM | Last Updated : 17th March 2022 11:11 PM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உள்ள நெடுங்கல் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்கல் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் நெல் பயிரிடப்படுகிறது. நெடுங்கல் கிராமத்தில் மட்டும் சுமாா் 500 ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல், அருகே உள்ள உலா் களங்களில் வைக்கப்பட்டுள்ளன.
நெடுங்கல் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் ஏற்கெனவே உறுதியளித்திருந்தனராம். ஆனால், உறுதியளித்தப்படி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து, வியாழக்கிழமை மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மதுராந்தகம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.