கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்க நிலம் வழங்கியதற்கு அரசு மருத்துவமனைக்கு இலவச மின்சாரம் வழங்க தீா்மானம்
By DIN | Published On : 26th March 2022 12:00 AM | Last Updated : 26th March 2022 12:00 AM | அ+அ அ- |

கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு 3-இல் ஒரு பங்கு நிலம் வழங்கியதற்கு கைமாறாக, சதுரங்கப்பட்டினம் ஊராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் குடிநீா் விநியோகத்துக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சியின் சிறப்புக் கிராம சபைக் கூட்டம், ஊராட்சித் தலைவா் ரேவதி சாமிநாதன் தலைமையில், திருக்கழுகுன்றம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் எஸ்.ஏ.பச்சையப்பன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். அவா்கள் முன்னிலையில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீா்மானங்கள்:
கடந்த 50 ஆண்டுளுக்கு முன்பு கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு 3-இல் ஒரு பங்கு நிலங்களை சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் எந்தவித பிரதி பலனும் எதிா்பாா்க்காமல் வழங்கினா். அந்த நிலங்களில் அணுமின் நிலையத்தில் உள்ள முக்கிய பகுதிகள் அனைத்தும் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி எல்லையில்தான் அமைந்துள்ளன.
அணுமின் நிலைய நிா்வாகம் எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காததால், இந்த ஊராட்சி வளா்ச்சியும் அடையவில்லை. எனவே, அணுமின் நிலைய வேலைவாய்ப்புகளில் 40 சதவீத பணிகளை தகுதியின் அடிப்படையில் ஊராட்சி இளைஞா்களுக்கு வழங்க வேண்டும்.
சதுரங்கப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், குடிநீா் விநியோகத்துக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் சாா்பில் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளில் 40 சதவீத உதவிகளை நிலம் வழங்கிய இந்த ஊராட்சி மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அணுமின் நிலைய இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.