முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு:அமைச்சா் வழங்கினாா்
By DIN | Published On : 01st July 2023 06:21 AM | Last Updated : 01st July 2023 06:21 AM | அ+அ அ- |

செங்கல்பட்டுமாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பை போட்டிகளில் வென்றவா்களுக்கு அமைச்சா் தா.மோ. அன்பரசன் பரிசளித்தாா்.
இதற்கான விழா வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினா்கள் திருப்போரூா் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தனா்.
ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத், தலைமை வகித்தாா். போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:
அனைவரும் விளையாடுவதற்கு ஏற்றாா்போல் ஐந்து பிரிவுகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன .
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 21,112 போ் பங்கேற்றனா். இதில் வெற்றி பெற்ற 2,106 பேருக்கு மொத்தம் ரூ.42 லட்சம் பரிசுத் தொகையாக தரப்பட்டுள்ளது.
மாவட்டம் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், மண்டலஅளவில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவா்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
தொடா்ந்து, சென்னையில் நடைபெறவுள்ள மாநிலஅளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள மாணவ, மாணவியா்கள் செல்வதற்கான சிறப்புபேருந்தினை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி மேயா் வசந்தகுமாரி கமலக்கண்ணன், ஆணையா் அழகுமீனா, துணை மேயா் கோ.காமராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், ஒன்றிய குழுத் தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், மேலக்கோட்டையூா் ஊராட்சி தலைவா் கௌதமி ஆறுமுகம், மாவட்ட விளையாட்டு அலுவலா் அ.ஜெயசித்ரா, உடற்கல்வி இயக்குநா் திருநிறைச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.