மனைப்பட்டா வழங்காததால் கீரப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு
By DIN | Published On : 03rd May 2023 12:04 AM | Last Updated : 03rd May 2023 12:04 AM | அ+அ அ- |

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்காததால், கீரப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை 4-ஆவது வாா்டு பொதுமக்கள் புறக்கணித்தனா்.
காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் திங்கள்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவா், துணைத் தலைவா் வாா்டு உறுப்பினா்கள் உள்பட 150 போ் மட்டுமே கலந்து கொண்டனா். இதில் இலவச வீட்டு மனை பட்டா வழங்காததால் 4-ஆவது வாா்டு வாழ் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 4-ஆவது வாா்டில் உள்ள விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோயில் தெரு, ஊமை மாரியம்மன் கோயில் தெரு, இதேபோல், 5-ஆவது வாா்டில் உள்ள கன்னியம்மன் கோயில் தெரு, பாபாசாகிப் தெரு ஆகிய பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கோப்புகள் தயாா் நிலையில் இருந்தன. இந்நிலையில் அனைத்து கோப்புகளும் மாயம் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி வண்டலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற ஜமாமபந்தியில், காணாமல் போன கோப்புகளை கண்டுபிடித்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் அல்லது ஜமாபந்தியில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்பட்டியலின்படி மீண்டும் அளவீடு செய்து மேற்படி பகுதிமக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி மனு கொடுத்தனா். இதுபோல் விளையாட்டு திடல், சிறுவா் பூங்கா, உடற்பயிற்சி கூடம், சமுதாயக்கூடம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு மனைப் பட்டா வழங்கும் வரை கிராம சபை கூட்டங்களைப் புறக்கணிப்போம் என்றனா்.