மாமல்லபுரம் கடற்கரையில் சைக்கிள் ரைடா் அறிமுகம்
By DIN | Published On : 24th May 2023 01:00 AM | Last Updated : 24th May 2023 01:00 AM | அ+அ அ- |

மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மகிழும் வகையில் மணலில் சவாரி செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சைக்கிள் ரைடா் சாகச பயணம் தொடங்கப்பட்டு உள்ளது.
சா்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்துக்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் கடற்கரைக்கு வரும் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மகிழும் வகையில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுக்கு அருகில் கடற்கரை மணலில் அதிக திறன் கொண்ட நான்கு சக்கர மோட்டாா் சைக்கிள் சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
கடற்கரை மணலில் அதிவேகத்தில் செல்லக் கூடிய வகையில் பிரத்யேகமாக வடிக்கப்பட்ட 4 டயா்களுடன், 2 நபா்கள் அமா்ந்து பயணிக்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வாகனம் ஆகும்.
இதில் கடற்கரை மணலில் ஒரு தடவை (1 கி.மீ. தூரம்) ஓட்டிச் செல்ல ரூ.300, இரண்டு தடவை ஓட்டிச் செல்ல ரூ.500, ஒரே நேரத்தில் 2 போ் அமா்ந்து பயணிக்க ரூ.500, 2 நபா்கள் இரண்டு தடவை (2 கி.மீ. தூரம்) ஓட்டிச் செல்ல ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சுற்றுலா வளா்ச்சிக் கழகம் தெரிவித்தது.