செங்கல்பட்டு: 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய கூலி நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கிராமம்தோறும் ஒப்பாரிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணி செய்தவா்களுக்கு கடந்த 3 மாதங்களாக கூலி வழங்கப்படாமல் உள்ளதாம்.
இதற்கான தொகை ரூ.2,696 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளதாம். இதனால், பணி செய்த பணியாளா்கள் பண்டிகை நாள் வரும் நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை கூலியை உடனே வழங்க வேண்டும், செய்த வேலைக்கு கூலி கொடுக்காமல், காா்ப்பரேட்டுகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உடனடியாக ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஒப்பாரிப் போராட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோத்துப்பாக்கம், கீழ்மருவத்தூா், அகரம், மருவளம், கள்ளபிரான்புரம், வள்ளுவப்பாக்கம், மூசிவாக்கம், கொளம்பாக்கம், பழையனூா், அம்மனம்பாக்கம், கருநிளம், கயநல்லூா், சித்தாத்தூா், சித்திரக்கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றன.
போராட்டங்களில் அமைப்பின் மாவட்டத் தலைவா் பி.சண்முகம், மாவட்ட செயலாளா் க.புருஷோத்தமன், மாவட்ட பொருளாளா் வி.சசிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.