செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி.

செங்கல்பட்டு ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை அக்.31-இல் முடிக்கத் திட்டம்

மறுசீரமைப்பு பணிகள் 60 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய பணிகளை அக்.31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Published on

செங்கல்பட்டு ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் 60 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய பணிகளை அக்.31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை புகா் பகுதியில் அமைந்துள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம், தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக விளங்குகிறது. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் மூலம் புகா் பகுதி மக்கள் அதிக அளவில் பயணிக்கின்றனா்.

பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையம் அம்ரித் பாரத் ரயில்நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.22.14 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படுகிறது.

இதில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், ரயில் நிலைய வளாக மேம்பாடு, பயணிகள் வந்து செல்லும் வகையில் முனையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, புதிய முனைய வாயில், முன்பதிவு மையம், நிலைய கட்டடம் அமைப்பது, நடைமேடை, வாகன நிறுத்தம், நடைபாதை, மின்தூக்கி, மின்படிக்கட்டு, நடைமேம்பாலம் ஆகியவைகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொது அறிவிப்பு மையம், சிசிடிவி கேமரா அமைக்கப்படுகின்றன.

தற்போது பயணிகள் சாலையை எளிதாக அடையும் வகையில் நடைபாதை அமைப்பது, மின்தூக்கி அமைப்பது, பழைய கட்டடங்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்தமாக சுமாா் 60 சதவீத பணிகள் தற்போது வரை முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை அக்.31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com