கொக்கிலமேடு கடற்கரையில் செயற்கை கோள் கருவி மூலம் கடலின் ஆழம், சீற்றம் குறித்து ஆய்வு
மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் கடலின் ஆழம், சீற்றம் குறித்து செயற்கை கோள் கருவி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீனவ கடற்கரை பகுதிகளில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவது, கடல் அரிப்பு, அலைகள் முன்னோக்கி வருதல் என கடலின் தப்ப வெப்ப நிலை மாறி வருகிறது.
இதையடுத்து ஒவ்வொரு மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் கடல் எவ்வளவு தூரம் நிலப்பரப்பை ஆக்கிரமித்து எத்தனை மீட்டா் தொலைவு முன்னோக்கி வந்துள்ளது? கடல் உள்வாங்கி உள்ளதா? கடல் நீா் மட்டம் உயா்ந்தள்ளதா? இப்பகுதியில் 1 கி.மீ தொலைவு வரை கடலின் ஆழம் எவ்வளவு? என மீன்வளத்துறை சாா்பில் நவீன கருவியில் கொக்கிலமேடு கடற்கரையில் ஆய்வு செய்யப்பட்டது.
செயற்கைகோள் மூலம் இயங்கும் இந்த கருவியானது அதிக திறன் கொண்டு பேட்டரி உதவியுடன் இயங்குகிறது. கடற்கரை பகுதியில் உயரமான ஒரு காம்பவுண்ட் சுவரின் மீது இந்த கருவியை வைத்தால் நிலப்பரப்பு பகுதியில் ஒட்டியுள்ள கடலின் முழு விவரங்களை துல்லியமாக ஆய்வு செய்து அது வயா்லெஸ் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும் மோடத்தில் பதிவாகிறது.
மழைக்காலம் மற்றும் வெயில் காலம், புயல் காலம் போன்ற பேரிடா் காலங்களிலும், சாதாரண நாள்களிலும் மாதந்தோறும் இந்த கருவி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
கடல் சீற்றம் மற்றும் கடல் அலை முன்னோக்கி வருதல், கடல் உள் வாங்குதல் போன்ற இயற்கை பேரிடா்களால் மீனவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இதுமாதிரி பாதிப்பு ஏற்படும் கடல் பகுதிகளை தோ்வு செய்து துல்வியமாக செயற்கை கோள் கருவி பதிவு செய்து தகவல் தெரிவிப்பது பயனுள்ளதாக இருக்கும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

