செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), மாதேஷ் (28), யுவராஜ் (24), விக்னேஷ்வரன் ஆகிய ஐந்து பேர் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே வாயலூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மாடு குறுக்கே புகுந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரப் பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நொறுங்கியது.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து சென்று காரில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் ராஜேஷ், ஏழுமலை, மாதேஷ் ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த யுவராஜ், விக்னேஷ்வரன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுராந்தகம் அருகே... கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் அமீது (45). துபையில் வேலை செய்து வந்த இவர் அண்மையில் சொந்த ஊர் திரும்பினார்.

பின்னர், மீண்டும் துபை செல்வதற்காக செவ்வாய்க்கிழமை இரவு காரில் சென்னை விமான நிலையத்துக்குச் சென்றார். அவரை வழியனுப்புவதற்காக மனைவி ஜெய்புனிசா (42), மகன்கள் மிஷால் (20), ஃபைசல் (14), அப்சல் அலி (15) ஆகியோர் உடன் சென்றனர். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (44) காரை ஓட்டினார்.

அப்துல் அமீதை விமானத்தில் வழியனுப்பிவிட்டு, அனைவரும் மதுராந்தகம் வழியாக காரில் ஊருக்குப் புறப்பட்டனர். மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சரவணன், ஜெய்புனிசா, மிஷால், ஃபைசல் ஆகியோர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அப்சல் அலி பலத்த காயம் அடைந்தார்.

மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துகுமார், உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று, காயமடைந்த அப்சல் அலியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சாய் பிரணீத், டி.எஸ்.பி. சிவசக்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

செங்கல்பட்டு அருகே இரு வேறு கார் விபத்துகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தியில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com