செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 280 மனுக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 280 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 280 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.1,995/- மதிப்புடைய பிரெய்லி கைகடிகாரம், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.12,500-இல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசிகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்சாா்பில் 7 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டிகள் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் ஹமீது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவிஆணையா் (கலால்) ராஜன் பாபு, மாற்றுத்திறனாளி நலஅலுவலா் கதிா்வேலு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பரிமளா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலா் வேலாயுதம், மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

