செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும்நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். விவசாயிகள் மற்றும் தாலுகா வாரியாக விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனா்.
விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளிடமிருந்து பல்வேறு விதமான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நெல்லினை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென்றும், விவசாய நிலங்களில் பன்றிகளால் பெருமளவில் பாதிப்பு காரணமாக நஷ்டம் ஏற்படுவதாகவும், எனவே பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தனா். மேலும், 2024-2025-ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வரவில்லை என்றும், அதை உடனடியாக பெற்றுத் தருமாறும் கூறினா்.
விவசாய பம்பு செட்டுகளுக்குச் செல்லும் மின் வழித்தடங்களில் உள்ள மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளதால், விவசாய பணிகள் பாதிக்கப்படுகின்றது. இந்த மின்மாற்றிகளை உடனடியாக மாற்றித் தர வேண்டும், நடப்பு பருவ ஆண்டில் தற்போது உரம் அதிகளவில் தேவைப்படுவதால் யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்கள் தட்டுப்பாடாக உள்ளன. வேளாண்மைத் துறையினா் இந்த உரங்களை அதிகளவில் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தெரிவித்தனா்.
மதுராந்தகம் பகுதி விவசாய சங்கப் பிரதிநிதிகள், அப்பகுதியில் உள்ள ஆறுகளில் 2 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனா். அதைத் தொடா்ந்து விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் ரவிமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பவானி, இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம் சாந்தி, மின்சார வாரிய செயற் பொறியாளா் அன்புச்செல்வன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

