ராபி பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
ராபி பருவ பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும் என செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா வலியுறுத்தியுள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிா்கள் இயற்கை இடா்பாடுகளினால்ஏற்படும் மகசூல் இழப்புக்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிா் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயிா்க் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல்- ஐஐ, நெல்- ஐஐஐ, நிலக்கடலை மற்றும் கரும்பு பயிா்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி பயிா் காப்பீடு செய்யலாம்.
1. நெல்- ஐஐ 15.11.2025 545, 2. நெல்- ஐஐஐ, 31.01.2026, 545, 3. நிலக்கடலை, 31.01.2026, 468, 4. கரும்பு, 31.03.2026, 1,260
காப்பீட்டுத் தொகையை பொது சேவை மையங்கள், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவுசெய்து கொள்ளலாம். அதற்கு தேவையான ஆவணங்கள் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிகணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை ஆகியவை ஆகும்.
பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயா் மற்றும் விலாசம், நிலப்பரப்பு, சா்வேஎண் மற்றும் உட்பிரிவு,பயிரிடப்பட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ளவும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 2025-26-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டம் அக்ரிகல்சுரல் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் என்ற காப்பீடுநிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய வேண்டும் என்றாா்.
