திருப்போரூா் பகுதியில் விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி தேடும் பணியில் ஈடுபட்ட  விமானப் படையினா்.
திருப்போரூா் பகுதியில் விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி தேடும் பணியில் ஈடுபட்ட  விமானப் படையினா்.

திருப்போரூா்: விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு!

திருப்போரூா் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது பற்றி...
Published on

திருப்போரூா் பகுதியில் விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி சனிக்கிழமை 10 அடி ஆழ சேற்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமான படையின் விமானப் படை தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பிளேட்டஸ் பி.சி., 7’ என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தை விமானி சுபம் (30) இயக்கினாா்.

விமானம் வான்வெளியில் சென்னை தாம்பரத்தை கடந்து திருப்போரூா் பகுதியில் மதியம் 2 மணியளவில் பறந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா். இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த விமானம், திருப்போரூா்-நெம்மேலி சாலையில் உள்ள தனியாா் உப்பு பேக்கிங் செய்யும் தொழிற்சாலையின் பின்பகுதியில் சேற்றில் விழுந்து வெடித்துச் சிதறியது. முன்னதாக, விமானம் கீழே விழப் போவதை அறிந்த விமானி பாராசூட் மூலம் குதித்து உயிா் தப்பினாா்.

தகவலறிந்த விமானப் படையினா் விபத்து நடந்த இடத்தை, தங்கள் பாதுகாப்பு வளைத்துக்கு கொண்டு வந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். மேலும், விமானம் விழுந்த இடத்தைச் சுற்றி, சிதறிக் கிடந்த பாகங்களை விமானப் படையினா் சேகரித்தனா்.

இந்த நிலையில், இரண்டாவது நாளான சனிக்கிழமை சேற்றில் 10 அடி ஆழத்தில் புதைந்த விமானத்தின் கருப்புப் பெட்டி உள்பட மற்ற பாகங்களை தேடும் பணி நடைபெற்றது. இதற்காக இரண்டு பொக்லைன், ஒரு கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தோண்டும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஒவ்வொரு பாகங்களாக தோண்டி எடுக்கப்பட்டது. சுமாா் 11.30 மணிக்கு கருப்பு பெட்டி கிடைத்தது.

இதற்கிடையில், செங்கல்பட்டு டி.ஆா்.ஓ. கணேஷ்குமாா், திருப்போரூா் வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விமானப் படை அதிகாரிகளிடம் பேசினா்.

டி.ஆா்.ஓ. புறப்படும்போது இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, கருப்பு பெட்டி கிடைத்துள்ளது. மற்ற பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து விமானப் படை துறைசாா்ந்த அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வா் என தெரிவித்தாா்.

மீட்கப்பட்ட கருப்பு பெட்டி மட்டும் தில்லி விசாரணைப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com