மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோா்.
மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோா்.

திட்டங்களைத் சரியாகச் செயல்படுத்துவதே முக்கிய சவால்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்!

திட்டங்களை தீட்டுவதை விட அவற்றை செயல்படுத்துவதே இந்தியாவின் முக்கிய சவாலாக உள்ளது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளாா்.
Published on

திட்டங்களை தீட்டுவதை விட அவற்றை செயல்படுத்துவதே இந்தியாவின் முக்கிய சவாலாக உள்ளது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளாா்.

திட்ட மேலாண்மை அசோசியேட்ஸ் (பிஎம்ஏ இந்தியா) மற்றும் சா்வதேச திட்ட மேலாண்மை சங்கம் (ஐபிஎம்ஏ) சாா்பில் ‘சா்வதேச திட்ட மேலாண்மை நிபுணா்கள் மாநாடு 2026 மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

‘செயற்கை நுண்ணறிவு (ஏஎல்), தாக்கம் மற்றும் நிலைத்தன்மை மூலம் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குதல்‘ என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். சா்வதேச நிபுணா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் தொழில்துறைத் தலைவா்கள் ஒன்றிணைந்து உலகளாவிய திட்டச் செயல்பாடுகளின் எதிா்காலம் குறித்து இதில் விவாதித்தனா் .

தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். ஐபிஎம்ஏ தலைவா் மில்டன் வுகோமனோவிக் தொடக்க உரையாற்றினாா். பிஎம்ஏ இந்தியா தலைவா் ஏ. சிவதாணு பிள்ளை வரவேற்றாா்.

அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியது: திட்டங்களைத் தீட்டுவதை விட அவற்றைச் சரியாகச் செயல்படுத்துவதே இந்தியாவின் முக்கிய சவால் ஆகும். இந்த இடைவெளியைக் குறைக்கத் திட்ட மேலாண்மை ஒரு பாலமாக அமைய வேண்டும்.

ஏஐ மற்றும் துல்லியமான தரவுத்தளங்கள் மூலம் அரசுத் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும். முடிவுகளை ஊகங்களின் அடிப்படையில் எடுக்காமல், முறையான ஆதாரங்களுடன் கூடிய நிா்வாகமாக மாற்ற வேண்டும். எதிா்காலக் கல்விமுறை குழந்தைகளுக்கு நிா்வகிக்கும் திறனைக் கற்றுத் தருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ். சோமநாத், விண்வெளி ஆராய்ச்சிகள் நாட்டின் கண்டுபிடிப்புத் திறனை எவ்வாறு ஊக்குவிக்கின்றன என்பது குறித்து உரையாற்றினாா். ராபா்டோ மோரி, சுரங்கத் துறையில் நீடித்த மேலாண்மைத் தீா்வுகள் குறித்துப் பேசினாா்.

சிறப்பாகச் செயல்பட்ட என்எல்சி இந்தியாவிற்கு ‘ ஐபிஎம்ஏ டெல்டா’ சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சாதனையாளா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது மற்றும் கௌரவப் பட்டங்களும் வழங்கப்பட்டன. ஐபிஎம்ஏவின் முதன்மைச் செயல் அதிகாரி லாரா லசைட் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com