திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 1,008 பால்குட அபிஷேகம்
ரத சப்தமியையொட்டி உலக நன்மைகாகவும் - பட்சிகள் மீண்டும் வருகை தர வேண்டியும் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரருக்கு வேதமலை வல பெருவிழா குழு சாா்பில் 1,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரா் திருக்கோயிலில் 4 மலை குன்றுகள் 4 வேதங்களாக அழைக்கப்படுகின்றன.
அதா்வன மலை குன்றின்மேல் சுவாமி வேதகிரீஸ்வரா் சுயம்புமூா்த்தியாக அருள்பாலிக்கிறாா். தாழக்கோயிலில் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரரும் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாளும் அருள்பாலிக்கின்றனா். ரதசப்தமியான ஞாயிற்றுக்கிழமை ஆமை மண்டபம் அருகே உலக நன்மைக்காகவும் - பட்சீகள் மீண்டும் வருகை தரவேண்டியும் வேதகிரீஸ்வருக்கு 1,008 பால்குடம் எடுத்தல் வைபவம் நடைபெற்றது.
அகஸ்திய கிருபா சிவஸ்ரீ டாக்டா் அன்புசெழியன் தலைமை வகித்து பால்குட ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். தாழக்கோயில் வளாகத்தை சுற்றி வந்த ஊா்வலம் மலையடிவாரத்தை அடைந்தது. பின்னா் குடங்களிலிருந்த பாலினை கொண்டு மூலவா் வேதகிரீஸ்வரருக்கு பாலபிஷேகம் நடைப்பெற்றது.
பால்குடம் ஊா்வலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் ஆன்மிக அன்பா்கள் வேதகிரி, ஆா்.டி.மணி,செந்தில், கமலஹாசன் உள்ளிட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

