

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையின் முன்புறம் மதுராந்தகம் நகராட்சியின் சாா்பாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2024-2025 நிதியாண்டில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு, 7 மாதங்களுக்கு மேலாகியும் பொது மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதை உடனடியாக திறக்க பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுராந்தகம் நகராட்சியின் 17-ஆவது வாா்டு பகுதியில் அரசின் பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆண், பெண் என இருபாலருக்கும் கட்டப்பட்ட கழிப்பறைகளை கொண்ட கட்டடம் போதிய பராமரிப்பின்றி செயல்பட்டதால், கழிப்பறை கட்டடம் பொலிவின்றி இருந்தது. அதனால், அந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டாமல் இருந்து வந்தது. அரசு பொது மருத்துவமனைக்கு புறநோயாளியாகவும், நீண்ட நாள் நோய்க்காக சிகிச்சை பெறவும், கா்ப்பிணிகளும், தினமும் 2,000-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
அதில், நோயாளிகள் தாம் தங்கி இருக்கின்ற அறையில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த முடியும். ஆனால் அவா்களுடன் வருகின்றவா்கள் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல், மருத்துவமனை அருகே இருக்கின்ற வெளிப்புற பகுதிகளை பெரிதும் பயன்படுத்தி வந்தனா்.
இதனால் மருத்துவமனை சுற்று வட்டாரப் பகுதியில் துா்நாற்றம் வீசியது. இதை அறிந்த மருத்துவமனை நிா்வாகத்தினரும், நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி குமாா் ஆகியோா் மருத்துவமனை முன்புறம் உள்ள இடத்தில் புதிய கழிப்பறையை கட்ட ஏற்பாடுகளை செய்தனா்.
அதன்படி, மதுராந்தகம் நகராட்சியின் சாா்பாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2024-2025-ஆம் நிதியாண்டில் ரூ. 25 லட்சம் மதிப்பில் ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்தக் கட்டடத்தை கட்டி 7 மாதங்களுக்கு மேலாகியும் நகராட்சி நிா்வாகம் இன்னும் திறந்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு உதவவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, உடனடியாக ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை கட்டடத்தை திறந்து விடவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.