ஏழைகளை "காலி' செய்யும் "காட்டன்' சூதாட்டம்
பொன்னேரி, ஜூலை 20: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஏழைகளின் பணத்தை அட்டை போல் உறிஞ்சி அவர்களை ஓட்டாண்டியாக்கி வருகிறது காட்டன் சூதாட்டம். இம்மாவட்டத்தில் பொன்னேரி பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற


பொன்னேரி, ஜூலை 20: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஏழைகளின் பணத்தை அட்டை போல் உறிஞ்சி அவர்களை ஓட்டாண்டியாக்கி வருகிறது காட்டன் சூதாட்டம்.
இம்மாவட்டத்தில் பொன்னேரி பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டட வேலை மற்றும் விவசாயக் கூலி வேலை செய்பவர்கள்.
இவர்கள் வேலைக்குச் சென்றால், நாள் ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை சம்பாதிக்கின்றனர்.
இந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அந்த குறைந்தபட்ச கூலித் தொகையை கூட முழுமையாக வீட்டில் கொடுக்க முடியாதபடி செய்து விடுகிறது பொன்னேரியில் நடைபெறும் "காட்டன்' சூதாட்டம்.
இந்த சூதாட்டத்துக்கு ஒன்றிலிருந்து 99 வரை உள்ள எண்கள் இலக்கு. இந்த எண்கள் மீது ஒரு ரூபாய் கட்டினால் அதற்கு ரூ.60 வழங்கப்படும்.
அதே போன்று ரூ. 10 செலுத்தினால் அதற்கு ரூ.600 வழங்கப்படும்.
ஆனால் பெரும்பாலானோர் செலுத்தும் எண்ணுக்குரிய தொகை வழங்காமல் குறைந்த எண்ணிக்கையிலானோர் செலுத்திய எண்ணுக்கே தொகை வழங்கப்படுகிறது.
இந்த எண்கள் அச்சிடுவது உள்ளிட்ட பேப்பர்கள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி சம்பாதிக்கும் பணத்தை, ஏழை விவசாயிகள், அவர்களது அறியாமையின் மூலம் இழந்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டன் சூதாட்டம் விளையாடி வரும் ஒருவரிடம் இது பற்றி கேட்ட போது, ""பல ஆண்டுகளுக்கு முன்பு பருத்தி (காட்டன்) விலை தினமும் பேப்பரில் வெளியாகும். அந்த பேப்பரை வைத்து அதில் பணம் கட்டி சூதாட்டம் போல் விளையாடி வந்தனர்.
இதையடுத்து பேப்பரில் பருத்தி விலை வருவது நிறுத்தம் செய்யப்பட்ட பிறகு, சட்ட விரோதமாக இந்த காட்டன் சூதாட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது'' என்கிறார். மேலும் இது குறித்து விவரம் தெரிந்த சிலரிடம் கேட்ட போது, ""இந்த சூதாட்டத்தை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முக்கியப் புள்ளி நடத்துவார்.
இதன் மையம் ஆந்திர மாநிலத்தில் இருந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் இந்த காட்டன் சூதாட்டம் இன்னமும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
காட்டன் சூதாட்டத்தை நடத்தும் முக்கியப் புள்ளி, அந்தந்தப் பகுதிகளில் உள்ளூரில் இருக்கும் முக்கியப் பிரமுகர்களிடம் பேசி, பின்னர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு மாதா மாதம் ஒரு தொகையை வழங்கி விடுவார்.
இதையடுத்து அப் பகுதியில் ஒரு சில பெட்டிக் கடையை தேர்ந்தெடுத்து அங்கு காட்டன் சூதாட்டம் நடத்தப்படும். அந்தக் கடைகளில் காட்டன் சூதாட்டம் ஆடுபவர்கள் தெரிவிக்கும் எண்கள் ஒரு சிறிய பேப்பரில் எழுதி தரப்படும். அடுத்த நாள் அந்த நபர் எழுதிய எண் வந்தால் அதற்குரிய பணம் வழங்கப்படும்'' என்றார்.
மேலும், காட்டன் சூதாட்டத்தை, பெட்டிக் கடைகளில் எழுதுபவர்களை பிடித்தால் அவர்கள் மீது சாதாரண சூதாட்ட வழக்குதான் பதிவு செய்யப்படுகிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தொடங்கிய லாட்டரிச் சீட்டு திட்டத்தையே அரசு தடை செய்துள்ளதுடன், லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்பவர்களை போலீஸôர் கைதும் செய்து வருகின்றனர்.
ஆனால் பொன்னேரி பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை அநியாயமாக இழக்கும் காட்டன் சூதாட்டத்தை அரசு இன்னமும் தடை செய்யாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.
பொதுவாக, இந்த காட்டன் சூதாட்டம் பொன்னேரி மட்டுமல்ல, திருத்தணி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸôர் ஆதரவுடன் பிரபலமாகி உள்ளது.
இதில் பலியாகியுள்ள விவசாயக் கூலிகளும், சோம்பேறி இளைஞர்களுக்கும் விமோசனம்தான் என்ன? அரசுதான் வழிசொல்ல வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...