சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உள்கட்டமைப்பு வசதியின்றி சட்டப் பல்கலைக்கழகம்

சென்னை, டிச. 2: தேவையான அளவு நிலம் ஒதுக்கியிருந்தும், போதிய நிதி இல்லாதக் காரணத்தால் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த இயலாத நிலை உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:51 pm

சென்னை, டிச. 2: தேவையான அளவு நிலம் ஒதுக்கியிருந்தும், போதிய நிதி இல்லாதக் காரணத்தால் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த இயலாத நிலை உள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள சட்டப் பல்கலைக்கழகம் 1997-ல் தொடங்கப்பட்டது. மிகச் சிறிய இடத்தில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில், துணைவேந்தர் அலுவலகம், வகுப்பறைகள், ஆற்றல்சார் பள்ளி, நூலகம், விடுதிகள் என அனைத்து கட்டமைப்புகளும் இடம்பெற்றிருப்பதால், இடநெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இடநெருக்கடி: இந்தச் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசுக் கல்லூரிகள், சேலத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரி என மொத்தம் 8 கல்லூரிகள் இணைப்புப் பெற்றுள்ளன.

இந்தக் கல்லூரிகளுக்கு பாடத் திட்டங்களை வகுப்பது, தேர்வுகளை நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்டப் பணிகளைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.

பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் மொத்தம் 10 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் ஒவ்வொரு பருவத் தேர்விலும் அதிகபட்சம் 7 தாள்கள் வரை எழுதவதால், ஒவ்வொரு பருவத் தேர்வின் முடிவிலும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வுத் தாள்கள் பல்கலைக்கழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்தத் தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணி 45 நாள்கள் நடைபெறும். 65 ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

ஆனால், இந்த 70 ஆயிரம் தேர்வுத் தாள்களைப் பாதுகாத்து வைப்பதற்கான அறையோ, திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒருங்கே அமர வைப்பதற்கான இடவசதியோ பல்கலைக்கழகத்தில் இல்லை என்கிறார் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர்.

இதனால் ஒவ்வொரு முறையும், பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள புத்தகங்கள், கணினிகள் அனைத்தும் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு, நூலக அறையை தேர்வுத் தாள் திருத்தும் பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனால், ஊழியர்களுக்கு தேவையற்ற வேலைப்பளு ஏற்படுவதோடு, நூலகத்தல் உள்ள புத்தகங்கள் சேதமடையும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் பேராசிரியர்கள்.

போதிய இட வசதி இல்லாததால், இரண்டு வகுப்பறைகளுக்கு இடையே தடுப்பு ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கான அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒருவர் மட்டுமே அமரக் கூடிய அளவில் உள்ள இந்த அறை, 4 ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுவரும் பேராசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இடநெருக்கடி காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாதிரி நீதிமன்றம், அலுவலகத் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் நீதிமன்ற பயிற்சியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிதி இல்லாததால் பறிபோன நிலம்: பல்கலைக்கழகத்தின் இந்த இடநெருக்கடியை அறிந்த தமிழக அரசு 2009 மற்றும் அதற்கு முன்பு, மூன்று இடங்களில் பல்கலைக்கழகத்துக்கு நிலம் ஒதுக்கியது.

தரமணி மெட்ரோ ரயில் நிலையம் அருகே 15 ஏக்கர் நிலமும், தாளம்பூரில் 8 ஏக்கர் நிலமும், தாம்பரத்தில் ஒரு ஏக்கர் நிலமும் பல்கலைக்கழகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், பல்கலைக்கழகத்திடம் போதிய நிதி இல்லாததாலும், தமிழக அரசு நிதி ஒதுக்காததாலும், அரசு ஒதுக்கிய நிலங்களில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாமல் போனது. இதனால் இந்த நிலங்களை உரிய முறையில் பராமரிப்பதையும், பல்கலைக்கழக நிர்வாகிகள் தவிர்த்துவிட்டனர்.

இதன் காரணமாக தாளம்பூரில் ஒதுக்கப்பட்ட 8 ஏக்கர் நிலம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற நிலங்களையாவது முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரசு நிதியை ஒதுக்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

தரமணியில் உள்ள 15 ஏக்கர் நிலத்தில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள், விடுதிகள், நிர்வாக அலுவலகக் கட்டடம், உள் விளையாட்டு அரங்கம், கலையரங்கம் ஆகிய கட்டமைப்புகளை ரூ. 60 கோடி மதிப்பில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட வரைபடத்தை பொதுப்பணித் துறை வடிவமைத்துள்ளது. இதற்கான நிதியை அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.