புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கார்த்திகை: விதவிதமான தீப விளக்குகள் தயார்!

சென்னை, டிச. 6: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, சென்னை சந்தைகளில் பொதுமக்களைக் கவரும் விதத்தில் ஏராளமான ரகங்களில் புதுப்புது வகை தீப விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.  புரசைவாக்கம், வண்ணாரப்பேட்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:57 pm

சென்னை, டிச. 6: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, சென்னை சந்தைகளில் பொதுமக்களைக் கவரும் விதத்தில் ஏராளமான ரகங்களில் புதுப்புது வகை தீப விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

 புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரி முனை, மயிலாப்பூர், அடையாறு பகுதிகளில் தீப விளக்குகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

 இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா நாளை (டிசம்பர் 8) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் குயவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கொசப்பேட்டையில் தீப விளக்குகளை தயார்செய்யும் பணி கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. ஆனால், அண்மையில் பெய்த மழை காரணமாக விளக்குத் தயாரிப்பில் பின்னடைவு ஏற்பட்டது.

 தலைமுறை தலைமுறையாக விளக்குத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் கொசப்பேட்டை குயவர்கள் ஆண்டுதோறும் புதிய வகை விளக்குகளை அறிமுகப்படுத்துகின்றனர். இவர்களால் உருவாக்கப்படும் விளக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 மேலும், இந்த ஆண்டு அன்ன வடிவ குத்து விளக்கு, பிரபை குத்து விளக்கு, மலபார் விளக்கு, பஞ்சலிங்க தீபம், அகல் விளக்கு, பாவை விளக்கு, பாலாடை விளக்கு, விநாயகர், லட்சுமி, பாலாஜி விளக்குகள், தொங்கு விளக்குகள், தூண்டாமணி விளக்கு, வாசமாலை விளக்கு, பித்தளை அகல் விளக்கு, வண்ணம் பூசப்பட்ட டெரக்கோட்டா அகல் விளக்கு, செல்வம் தரும் குபேர விளக்கு, நந்தா தீபம், கல்வி தரும் வித்யா தீபம், காமாட்சி விளக்கு, அஷ்டலட்சுமி, 108 அஷ்டோத்ர தீபம், ஐந்தடுக்கு, ஏழடுக்கு விளக்குகள் எனப் பல புதிய ரக விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

 இது குறித்து தீப விளக்கு விற்பனையாளர், புரசைவாக்கம் மகேந்திரன் கூறியது:

 இந்த ஆண்டு ஒரு அகல் விளக்கு அதன் தரத்துக்கு ஏற்ப ரூ. 2 முதல் ரூ. 6 வரை விற்கப்படுகிறது. இதே போல் பீங்கானில் செய்யப்பட்ட அகல் விளக்குகள் ரூ. 20-க்கு 8 என விற்கப்படுகிறது.

 மேலும், யானை விளக்கு, பஞ்சமுக விளக்கு, பாவை விளக்கு, சின்ன மற்றும் பெரிய தேங்காய் விளக்கு, பீங்கான் சட்டி மற்றும் மண் சட்டி விளக்கு போன்ற பல்வேறு தீபங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அலங்கார தீப வகைகள் தரத்திற்கு ஏற்றாற்போல் ஜோடி ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 பொது மக்கள் பலரும் அலங்கார தீப விளக்குகளை வாங்குவதால் இந்த ஆண்டு இதன் தேவையும் அதிகரித்து வருகிறது' என்றார் மகேந்திரன்.

 கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பாலாஜி ராவ் கூறியது:

 "பொது மக்களின் ரசனைக்கு ஏற்ப தற்போது தீபங்களின் விலை தற்போது நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் ரூ. 100 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வகை தீப விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போது எலக்ட்ரிக் விளக்குகளும் பொது மக்களால் அதிக அளவு விரும்பி வாங்கப்படுகிறது. ஏழை முதல் பணக்காரர்கள் வரை கொண்டாடும் நன்னாள் திருக்கார்த்திகை தீபத் திருநாள். இதனால் விளக்குகளின் விலையும் அனைத்து தரப்பு மக்களும் வாங்கக்கூடிய அளவிலேயே இந்த ஆண்டும் உள்ளது' என்றார் பாலாஜி ராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.