கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திருப்பாவை - பாசுரம் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்று பால்சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின்வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:29 pm

பாவலர் மலரடியான்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்று பால்சோர

நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின்வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்தில்லத்தாரு மறிந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: இறைவனுக்குத் தொண்டு செய்வது அடிமைப் பண்பு. அவனோடு எப்போதும் இருந்து, அவனுக்குத் தேவையான அடிமைச் செயல்களை அவனுடைய மகிழ்ச்சிக்காக மனநிறைவுடன் செய்யவேண்டும். இதற்குப் "பிரியாவடிமை' என்று பெயர். இவ்வாறு அடிமை செய்பவர் அனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேஷன். திருமால் இராமனாகப் பிறந்தபோது இவரே இலக்குவனாகப் பிறந்தார். இராமன் நாட்டிலும் காட்டிலும் இருந்தபோது அவருக்கே அடிமை செய்து வந்தார். திருமால் கண்ணனாகப் பிறந்தபோது, அடிமை செய்வதிலேயே ஊக்கமுடைய ஓர் ஆயர்மகன் இருப்பான். கண்ணன் மாடு மேய்க்கச் சென்றால் அவனோடு இவனும் சென்றுவிடுவான். இத்தகைய ஆயர்மகனின் தங்கையைத் தோழியர்கள் இப்பாசுரத்தால் எழுப்புகிறார்கள் நற்செல்வன் தங்காய்! என்று. பால் கறக்கவேண்டிய நேரத்தில் கறப்பார் வீட்டில் இல்லாமையால் கன்றினை அவிழ்த்துவிடுவோர் எவருமில்லை. எருமை தன் கன்றுகளை நினைத்துக் குமுறுகிறது. கன்றுகளை நினைத்து இரக்கம் கொண்டு தானே பாலைச் சுரக்கிறது. இதனால் பால்வெள்ளம் பெருகி வீடெல்லாம் சேறானது. கண்ணனுக்கு நற்செல்வமாகிய தொண்டு செய்யும் மகனின் தங்கையே! எழுந்திரு என்கிறார்கள் தோழியர். படுத்திருப்பவளுக்குக் கண்ணன் மீது சிறிது சீற்றம். இராமனே! பெண்ணின் வருத்தமறிந்தவன். இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபிறகு, அப் பிரிவைத் தாங்காமல், அணைகட்டி, இலங்கை சென்று இராவணனோடு போர் செய்து, அவனை அழித்துச் சீதையை மீட்டு வந்தான். அவனே பெண்களின் மனதிற்கு இனியவன். அவனைப் பாடுங்கள். கண்ணன் பெண்ணின் வருத்தமறியாத பெருமான். ஆதலால் இவனைப் பாடாதீர்கள் என்றாள்; உன் விருப்பப்படியே இராமனைப் பாடினோம். ஆனால், நீ வாய்திறந்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. உன்னை எழுப்புவதை அனைவரும் அறிந்து கொண்டார்கள். இன்னும் எதற்காகப் படுத்திருக்கிறாய், எழுந்திராய் என்று கூறி எழுப்பினார்கள்.

(இப்பாசுரத்திற்கான திவ்ய தேசம் "சிதம்பரம்' எனப்படும் தில்லை திருச்சித்திரக்கூடம் ஆகும். இப் பாசுரம் பொய்கையாழ்வாரை எழுப்புவதாகக் கூறுவர்)..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.