சென்னை, பிப். 15: சீமைக் கருவேல மரங்கள் சூழ கழிவுநீர், துர்நாற்றம், கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியாக காட்சியளித்த இடம், கண்களைக் கவரும் வண்ண பூங்காவாக --தொல்காப்பியப் பூங்கா-- என்ற பெயரில் இப்போது உருவெடுத்துள்ளது.
பலதரப்பட்ட தாவரங்கள், பறவைகள், பல்லுயிர் பெருக்கத்தை விளக்கும் கற் சிற்பங்களும், வண்ண ஓவியங்களும் கவனத்தை ஈர்ப்பதோடு, படிப்புக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என பள்ளி மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
358 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், 58 ஏக்கர் பரப்பை சீரமைத்து சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி ஏறத்தாழ முடிந்துவிட்டது.
முல்கள் நிறைந்த சீமைக் கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு, குழந்தைகள் ஓடி விளையாடும் அளவுக்கு புல் தரையாக மாற்றப்பட்டிருப்பதோடு, கூவம்போல் காட்சியளித்த கழிவுநீர் தேக்கம், நன்நீர் ஓடையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
ஆங்காங்கே மரப் பாலங்கள், கரை முழுவதும் புல் வெளிகள், வரிசையாக வைக்கப்பட்ட அழகிய கற்கள் என கவர்ச்சிகரமாக ஓடை மாற்றப்பட்டுள்ளது.
173 வகையான தாவரங்கள்:
உலர் வெப்பமண்டல பசுமைமரக் காடுகளைச் சார்ந்த தாவரங்கள் உள்பட 173 வகையான தாவரங்கள் பூங்காவில் நடப்பட்டுள்ளன.
கன்னீரா மரம், காட்டு எலுமிச்சை, நுரை புங்கன், வீரமரம், வெண்ஆந்தை, தூங்கு மூஞ்சிமரம், அத்தி மரம் என பல்வேறு வகையான மரங்களும் காட்சி தருகின்றன.
வெள்ள நீர்ப்பிடிப்பு பகுதியின் கரைகளில் சோழமண்டல கடற்கரை காடுகளில் காணப்படும் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாற்று கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நிலம் மற்றும் மரங்களில் வாழும் உயிரினங்களுக்கு முக்கிய வாழ்விடம் என்பது குறிப்பிடத்தக்கது.
100-க்கும் மேற்பட்ட பறவை வகைகள்:
ஒரு காலத்தில் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் பல்லுயிரிகளின் வாழ்விடமாக விளங்கி, அழிவின் நிலைக்கு சென்ற இந்த இடம் இப்போது மீண்டும் பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், பட்டாம்பூச்சிகள் என முதுகெலும்புள்ள மற்றும் முதுகெலும்பற்ற பல்லுயிர்களின் புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது.
நீர்க் காகம், முக்குளிப்பான், சாம்பல் நாரை, செம்புத்தட்டான், மரங்கொத்தி, கருங் குயில்கள், பலதரப்பட்ட கொக்கு வகைகள் என 100-க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட பறவைகள் தினமும் இங்கு வந்து செல்கின்றன. இவற்றில் கடற்கழுகு, மஞ்சள் புள்ளி அழகு வாத்து ஆகியவை புது வரவுகள் என்கின்றனர் பூங்கா நிர்வாகிகள்.
சுத்தப்படுத்தப்பட்ட நீர் நிலைகளில் அழகிய வாத்துகள் வலம் வருகின்றன. பல்வேறு இன தவளைகளும், அரிய வகை மீன்களும் இவற்றை கொத்தித் தின்பதற்காக நீர்க் காகமும், கொக்குகளும் காத்திருக்கும் காட்சிகளும் சென்னையில்தான் நிற்கின்றோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
இங்கு காணப்படும் பறவைகளில் சில, வடக்கு ஆசியாவிலிருந்தும், வடகிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் இடம்பெயர்ந்து வருவதாகவும் அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.
50 வகையான பட்டாம்பூச்சிகள்:
கிரிம்ப்சன் ரோஸ், டெனாய்ட் முட்டை பட்டாம்பூச்சி உள்ளிட்ட அரிய இனங்கள் உள்பட 50 வகை பட்டாம்பூச்சிகள் இங்கு வந்து செல்கின்றன. பகல் நேரங்களில் இவற்றை காண முடியும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் இங்கு காணப்படும் பல்லுயிர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துவிடும் என்கிறார் அங்கு வழிகாட்டுநராக பணிபுரியும் பிரகலாத்.
கல்லிலே கலை வண்ணம்:
பூங்காவில் திரும்பியப் பக்கமெல்லாம் பசுமை நிறைந்து காணப்படுவதுபோல், கற்சிற்பங்களும், பல்லுயிர் பெருக்கத்தை பறைசாற்றும் வண்ண கல் ஓவியங்களுமாக காட்சியளிக்கின்றன.
செங்குத்தாக நட்டுவைக்கப்பட்ட கல்லில் பச்சோந்தி நிற்பதுபோலவும், தட்டையான கல்லில் வண்டு ஊர்வதுபோலவும், இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைவது போலவும் தத்ரூபமாக ஒரே கல்லில் செதுக்கப்பட்டு ஆங்காங்கே நட்டு வைக்கப்பட்டுள்ளன.
50-க்கும் மேற்பட்ட பாம்புகள் பின்னிப் பிணைந்திருப்பதுபோல் வடிவமைத்து அமைக்கப்பட்டிருக்கும் இரும்பாலான இருக்கையில் மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு அமர்ந்து பார்த்தனர்.
பூங்காவை சுற்றிப்பார்த்த மாணவர்கள் சிலர் கூறுகையில், பூங்காவை சுற்றிப்பார்த்தது பொழுதுபோக்கோடு உயிரியல் பாடத்தைக் கற்றதுபோல் இருந்தது. இதுவரை கண்டிராத பலதரப்பட்ட தாவரங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. நீர் நிலைகளில் பரிசல் சவாரிக்கு ஏற்பாடு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்-- என்றனர்.
செவ்வாய்க்கிழமை முதல் பள்ளி மாணவர்கள் மட்டும் ஆசிரியர்களுடன் குழுவாக பூங்காவுக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
மரங்களின் பெயர் குறிப்பிடப்படுமா?
பூங்காவில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் என முக்கியமானவர்கள் நட்ட ஒரு சில மரங்களுக்கு மட்டுமே, அது எந்தவகை மரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மற்ற நூற்றுக்கணக்கான மரங்களுக்கு, அது என்ன மரம் என்பது குறிப்பிடப்படவில்லை.
இதனால் ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. யார் நட்டது என்பதை குறிப்பிடுவதுடன் அது எந்த வகை மரம், எங்கு அதிகம் காணப்படும், பயன் என்ன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர் மாணவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


