மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கும் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்

சென்னை, ஜூலை 14: மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் இருவர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் மருத்துவப் படிப்பில
Published on
Updated on
2 min read

சென்னை, ஜூலை 14: மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் இருவர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும்.

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளிகள் 27 பேர், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இவர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தை தாயுடன், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறி பட்டறைக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

விசைத்தறி பட்டறையிலிருந்து 12 வயதில் மீட்கப்பட்ட ராமலிங்கம், குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு வரை படித்த இவர், பின்னர் பொதுப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து படித்த ராமலிங்கம், பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1160 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

இவரைப்போல், மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1123 மதிப்பெண்கள் பெற்றார்.

மூர்த்தி பெற்றோருடன் கட்டட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 11 வயதில் மீட்கப்பட்டார். பின்னர் சிறப்புப் பள்ளியில் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததும், பொதுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த இருவரும், குடும்பச் சூழ்நிலை காரணமாக மீண்டும் பெற்றோருடன் வேலைக்குச் செல்ல முற்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராமலிங்கத்துக்கு மாவட்ட ஆட்சியரும், மூர்த்தி பள்ளி ஆசிரியர்களும் ஊக்கமளித்ததன் பேரில், மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கலந்தாய்வில் பங்கேற்ற இவர்களில் மூர்த்திக்கு சேலத்திலுள்ள மோகன்குமாரமங்லம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ராமலிங்கத்துக்கு திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை இவர்களுக்கு அளித்திருக்கும் அதேவேளையில், படிப்புக்கு ஆகும் செலவு குறித்த எண்ணம் இவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாணவர் மூர்த்தி கூறியது:

குடும்பச் சூழ்நிலை, ஆழ்ந்து படிக்க வேண்டும் எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. இப்போது மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கும், பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்தவம் படித்து, எனது கிராமத்தில் ஏழை மக்களுக்கு தொண்டாற்றுவேன். பெற்றோரின் வருமானம், குடும்பச் செலுவுகளுக்கே போதவில்லை. எனவே, மருத்துவப் படிப்புக்கு ஆகும் செலவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

முதல் தலைமுறை மாணவர் என்பதால், கல்விக் கட்டணம் ரத்தாகும் என்றாலும், பிற செலவுகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றார்.

இவர்களைப்போல் அதிக மதிப்பெண்களை பெற்ற 27 பேர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, விசைத்தறி வேலையிலிருந்து மீட்கப்பட்டவர். இவர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1112 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.