டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ள கணிதத் திறன் பயிற்சி இலவசமா?

சென்னை, ஜூன் 6: சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ள முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோரிடையே எழுந்து

Updated On :20 செப்டம்பர் 2012, 2:31 am

சென்னை, ஜூன் 6: சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ள முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோரிடையே எழுந்துள்ளது.

முந்தைய ஆண்டுகளில் பொறியியல் கணித பாடத்தில் மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக இருந்ததைத்தொடர்ந்து, கடந்த 2010-ம் ஆண்டில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் படித்து வந்த முதலாம் ஆண்டு பி.இ. மாணவர்களிடையே இதுதொடர்பான ஆய்வு ஒன்றை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மேற்கொண்டது.

அதாவது பிளஸ்-2 அளவிலான கணிதப் பாடத்திலிருந்து தேர்வு நடத்தி, அவர்களுடைய கணிதத் திறன் பரிசோதிக்கப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களின் கணிதத் திறனும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.

20 சதவீத மாணவர்கள் கூட 40 சதவீதத்துக்கும் கூடுதலான மதிப்பெண்ணை பெற இயலவில்லை. வருத்தம் என்னவென்றால் இவர்களில் 80 சதவீத மாணவர்கள், பிளஸ்-2-வில் கணிதப் பாடத்தில் 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள்.

பள்ளிகளில் சில முக்கிய பகுதிகள் அடங்கிய பிளஸ்-1 கணிதத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காததும், சிந்திக்க வாய்ப்பளிக்காமல் புத்தகத்தில் இருப்பதை அப்படியே கற்றுத் தருவதுமே மாணவர்களின் இந்த மோசமான நிலைக்குக் காரணம். பொறியியல் பட்ட மாணவருக்கு கணிதம் முக்கியம் என்பதை கல்லூரிகளும் சுட்டிக்காட்ட தவறி விடுகின்றன என அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களின் இந்த மோசமான நிலையை போக்குவதற்காக ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி, முன்னோடித் திட்டம் ஒன்றை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் கணித அடிப்படை தத்துவம், பொறியியல் பயன்பாடுகள் ஆகிய தலைப்புகளில் 3 மணி நேர வகுப்பும், பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

இந்த கணிதப் பயிற்சி ஜூன் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விழுப்புரம் மற்றும் ஆரணி பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும், சென்னை லயோலா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னையில் உள்ள பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, சவீதா பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரிகளிலும் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ. 1,500. விண்ணப்பிக்க ஜூன் 10 கடைசி தேதி. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி நடத்தப்படும் இந்த பயிற்சி, லாப நோக்கம் இன்றி ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் இலவசமாக நடத்த வேண்டும் என பெற்றோரும், பேராசிரியர்களும் வலியுறுத்துகின்றனர்.

பொறியியல் படிப்புகளை மேற்கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள் கல்விக் கட்டணத்தைக் கூட சரிவர செலுத்த இயலாத அளவுக்கு ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதுபோன்ற மாணவர்கள் ரூ. 1500 கட்டணம் செலுத்தி இந்தப் பயிற்சியை பெறுவது என்பது இயலாத காரியம்.

எனவே, கணிதப் பயிற்சியை இலவசமாகவும், அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்கும் வகையிலும் நடத்த பல்கலைக்கழகம் முன்வரவேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

இதுபோன்ற பயிற்சியை படிப்புடன் சேர்த்து வழங்கும் வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அனைத்து மாணவர்களையும் இதன் பலன் சென்றடையும் என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.