டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பட்டப் படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

சென்னை, ஜூன் 15: சென்னைப் பல்கலைக்கழகம் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை இன்னும் வெளியிடாததால், வெளி மாவட்ட கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவ, மாணவிகளின் நிலை கேள்விக்கு

Updated On :20 செப்டம்பர் 2012, 2:38 am

சென்னை, ஜூன் 15: சென்னைப் பல்கலைக்கழகம் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை இன்னும் வெளியிடாததால், வெளி மாவட்ட கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவ, மாணவிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாமதத்தால் தங்களின் குழந்தைகளுக்கு ஓராண்டு வீணாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளில், தன்னாட்சி அல்லாத 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தேர்வுகளை நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்ட பணிகளை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.

2010-11 கல்வியாண்டில் நடத்தப்பட்ட பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வு, சட்டப் பேரவைத் தேர்தல் காரணமாக தாமதமானது.

ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கிய தேர்வுகள் ஏப்ரல் 9-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டன. தேர்தலுக்குப் பிறகு ஏப்ரல் 18-ம் தேதி மீண்டும் தொடங்கி மே முதல் வாரம் வரை பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதன் பிறகு தேர்வுத் தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டன.

இதனால், தேர்வு முடிவுகள் வெளியிடுவதும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தாமதம் காரணமாக, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு குடிபெயரும் நிலைக்கு ஆளாகியுள்ள மாணவர்கள், அங்குள்ள கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சில பல்கலைக்கழகங்கள் ஓரிரு நாள்களில் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளன. இதுகுறித்து சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இளநிலை பட்டப் படிப்பை முடித்துள்ள மாணவியின் பெற்றோர் கூறியது:

எனது கணவருக்கு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடாததால், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மேற்கொண்டுவந்த எங்களுடைய மகளை நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

5-ம் பருவ சான்றிதழே இன்னும் வழங்கவில்லை: நாகர்கோவிலில் உள்ள கல்லூரிகளுக்கு இன்னும் ஒரு சில நாள்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தொடர்ந்து 5 அல்லது 6 நாள்களில் மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிடும்.

இதன் காரணமாக இப்போது அங்குள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. கல்லூரியில் இடம் கிடைத்ததிலிருந்து 10 தினங்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என அங்குள்ள கல்லூரிகள் நிர்பந்திக்கின்றன.

ஆனால், எங்களுடைய மகளுக்கு இன்னும் 5-ம் பருவத்துக்கான மதிப்பெண் சான்றிதழே வழங்கப்படவில்லை.

சென்னை பல்கலைக்கழகத்தின் மெத்தனப்போக்கால், எங்களுடைய மகள் முதுநிலை பட்டப் படிப்பில் சேர முடியாமல் ஓராண்டு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

சட்டப் பேரவைத் தேர்தல் காரணமாகத்தான் பருவத் தேர்வுகள் தாமதமாகின. தேர்வு முடிவுகள் வெளியிடுவதும் இதனால்தான் தாமதமாகி வருகிறது.

ஜூலை 5-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும். அதன் பிறகு ஓரிரு வாரங்களில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விடும்.

வெளி மாவட்ட கல்லூரிகளுக்கு பட்ட மேற்படிப்புகளுக்காகச் செல்லும் மாணவர்கள், அவர்களிடம் உரிய காரணத்தைக் கூறி நிபந்தனை அனுமதியை பெற்று சேர்ந்து கொள்ளலாம்.

மேலும் இளநிலை பட்டப் படிப்பு 5-ம் பருவத் தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.