புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புத்தாண்டு: கடைகளில் சூடுபிடித்தது வியாபாரம்

சென்னை, ஜன. 1: 2012-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, துணிக் கடைகளிலும் நகைக் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது. சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், வண்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:25 pm

சென்னை, ஜன. 1: 2012-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, துணிக் கடைகளிலும் நகைக் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது.

சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கன மழை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக துணிக்கடைகளில் வியாபாரம் குறைவாகவே காணப்பட்டது.

ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில் புதுத்துணி வாங்குவது என்பது அண்மைக்காலமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் புதுப் பழக்கமாகும். ஆண்டின் முதல் நாளில் புதுத் துணி வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும் புதுத் துணி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது.

ஜனவரி 15-ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதுவும் துணிக் கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கக் காரணமாகும். பொதுவாக, டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்காக புது ரகத் துணி வகைகள் வந்துவிடுகின்றன. புத்தாண்டு தொடங்கியிருப்பதாலும் பொங்கல் நெருங்குவதாலும் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று துணிக் கடை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நகைக் கடை: தியாகராய நகர் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள நகைக் கடைகளில் புத்தாண்டையொட்டி வியாபாரம் விறுவறுப்பாக இருந்தது. குறிப்பாக, பெண்கள் புத்தாண்டில் தங்க நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். மேலும், ஜனவரி 15-ம் தேதி "தை' பிறப்பதால், திருமண சீசன் ஆரம்பமாகிறது. அதன் காரணமாக, தங்க நகைகளை வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது என்று நகைக் கடை உரிமையாளர்கள் கூறினர்.

கொண்டாட்டங்கள் இல்லாத ரங்கநாதன் தெரு: ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளில் தியாகராய நகர் ரங்கநாதன் தெரு மக்கள் கூட்டத்தால் திணறும். ஆனால், தற்போது ரங்கநாதன் தெருவில் சில முக்கியக் கடைகளுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. சீல் வைத்துள்ளதால், வழக்கத்துக்கு மாறாக கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக பண்டிகைக் காலங்களை நம்பிப் பிழைக்கும் தெருவோர வியாபாரிகள் பலர், தியாகராய நகரின் வேறு பகுதிகளுக்கு வியாபாரம் செய்யச் சென்று விட்டனர்.

தையல்காரர் க. மனோகரன் : "நான் ரங்கநாதன் தெருவில் தையல்காரராக 10 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். இங்கு டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வியாபாரம் அதிகமாக இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையினால் வருமானம் அதிகமாக இருக்கும். இங்குள்ள கட்டடங்களுக்கு சீல் வைத்த பின்பு என்னுடைய தொழில் நலிந்து விட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பெரியோர் கூறுவர்.

அதுபோல் ரங்கநாதன் தெருவில் சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளைத் திறந்தால் என்னைப் போன்றவர்களுக்கு வழி பிறக்கும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.