ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தலைமைச் செயலகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு

சென்னை, ஜூலை 21: தமிழக அரசின் இதயமாகச் செயல்படும் தலைமைச் செயலகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. தட்டுப்பாட்டைப் போக்க, சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிக

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:32 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, ஜூலை 21: தமிழக அரசின் இதயமாகச் செயல்படும் தலைமைச் செயலகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. தட்டுப்பாட்டைப் போக்க, சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.

 தலைமைச் செயலகத்தில் 34-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளும், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்களும், அரசியல் பிரமுகர்களும் தலைமைச் செயலகம் வந்து செல்கின்றனர். பழமையான கோட்டை கட்டடத்தில் 3 தளங்களும், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 தளங்களும் உள்ளன.

 வற்றியது கிணறு: தலைமைச் செயலகத்தில் குடிநீர், கழிவறை போன்றவற்றின் பயன்பாட்டுக்காக நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு பின்புறமுள்ள பகுதியில் கிணறில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு அது மிகப்பெரிய தரைகீழ் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டு வந்தது.

 கடுமையான கோடை வெயில் காரணமாக, கிணற்றில் நீர் இல்லாமல் இப்போது முழுமையாக வறண்டு விட்டது. கடந்த சில வாரங்களாக தலைமைச் செயலகத்துக்கு வரும் பொது மக்களும், ஊழியர்களும் தண்ணீர் இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையைச் சந்திக்க நேர்ந்தது.

 பெரும் நஷ்டம்: தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தினந்தோறும் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த லாரி தண்ணீர் தரைகீழ் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

 இந்தத் தண்ணீர் இலவசமாக தரப்படுவதில்லை எனவும், வெளி ஆட்களுக்கு என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ அதே விலைக்குத் தான் கொடுக்கப்படுவதாகவும் பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இதனால், ஒரு மாதத்துக்கு மட்டும் லட்சக்கணக்கான ரூபாய் தண்ணீருக்கு மட்டுமே செலவிடப்படுகிறது.

 இதைத் தவிர்த்து, ஊழியர்களும் குடிநீருக்காக மினரல் பாட்டில்களையே வாங்குகின்றனர். அதற்கான பணமும் துறையின் நிதியில் இருந்தே எடுக்கப்படுகிறது. தண்ணீரைச் சுத்திகரித்து வழங்கும் இயந்திரங்கள் தலைமைச் செயலகத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. அவை இப்போது பயன்பாடற்ற நிலையில் காட்சி அளிக்கின்றன.

 தீ விபத்து ஏற்பட்டால்... தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய அளவுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பதற்குத் தேவையான தண்ணீர் கூட இல்லை என்று ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதற்காகவே, ஒன்றுக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 தீ விபத்து ஏற்பட்டவுடன் இருக்கும் தண்ணீரை வைத்து தீயை அணைப்பதற்குக் கூட போதுமான அளவுக்கு நீர் இல்லை என்பதே அனைத்து தரப்பினரின் கருத்து.

 பழைய இணைப்பு என்னவானது? ரயில்வே துறைக்கு வழங்கப்படுவது போன்று தலைமைச் செயலகத்துக்கும் 24 மணி நேரமும் நீர் வழங்கக் கூடிய வகையில் கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 அதாவது, அங்கு தரைக்கு கீழே மிகப்பெரிய ராட்சத தொட்டி அமைத்து அதில் நாள் முழுவதும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

 அது தொட்டியில் நிரம்பியவுடன் மோட்டார் மூலம் தலைமைச் செயலகத்தில் உள்ள மற்றொரு தொட்டியில் ஏற்றப்படும். பின்னர் பயன்பாட்டுக்கு கொடுக்கப்படும்.

 இந்த அமைப்பு இப்போது பழுதாகியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவே தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கையாக அமையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

 தலைமைச் செயலகத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கும், ஊழியர்களுக்கும் சுத்தமான குடிநீரும், சுகாதாரமான அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

 அனைத்து மாவட்டங்களுக்கும் திட்டங்களை வகுத்து அவற்றைச் செயல்படுத்தும் தமிழக தலைமைச் செயலகத்தில் அடிப்படை வசதிக் குறைபாடுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.