புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு அறை தயார்

சென்னை, ஜூன் 12: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கண்காணிப்பு அறை செவ்வாய்க்கிழமைமுதல் செயல்படத் தொடங்கியது.  சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஜூன் 2-ம் தேதி பயிற்சி டாக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:11 am

சென்னை, ஜூன் 12: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கண்காணிப்பு அறை செவ்வாய்க்கிழமைமுதல் செயல்படத் தொடங்கியது.

 சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஜூன் 2-ம் தேதி பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதையடுத்து முதுநிலை மருத்துவ மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும் அண்மையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மருத்துவமனையின் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது. மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் ஜூன் 6-ம் தேதி முடிவுக்கு வந்தது.

 மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக முதல்கட்ட பாதுகாப்புப் பணிகள் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் படிப்படியாக நடைபெற்று செவ்வாய்க்கிழமை அனைத்தும் முடிவுக்கு வந்தன.

 அவசர சிகிச்சை வார்டில் நோயாளிகளின் உதவியாளர்கள் அத்துமீறி கூட்டமாகச் செல்வதை தடுக்க தடுப்பு இரும்பு வேலி இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. 201-வது வார்டில் தடுப்பு வேலி அமைக்கும் பணியும் முழுவதுமாக முடிவடைந்தது.

 அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வார்டுகளில் நோயாளிக்கு உதவ வரும் நபர் யார், உடன் தங்கி இருப்பவர் யார் போன்ற விவரங்கள் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 அவசர சிகிச்சை வார்டு (202), காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகள் 201, 205, 206 ஆகிய வார்டுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

 இந்தக் கேமராக்கள் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளிகளைப் படம் பிடித்து பதிவு செய்துவிடும். இந்தப் பதிவுகளை சுமார் 6 மாதங்களுக்கு சேமித்து வைக்க முடியும்.

 இதற்கான கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டு அங்கு ஷிப்ட் முறையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து கண்காணித்து வருவர். இனிமேல், இந்தக் கண்காணிப்பு அறையிலிருந்தே அவசர சிகிச்சைப் பிரிவு வார்டுக்கு வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

 மருத்துவமனையின் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த 16 பாதுகாவலர்களும், போலீஸார் 16 பேரும் ஷிப்டு முறையில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்

 அனுமதி சீட்டு: மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுபவர்களுடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது. அனுமதிச் சீட்டு அச்சடிக்கப்பட்டு நோயாளிகளுடன் வருபவர்களுக்கு வழங்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதியின்றி நுழைவோர் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 அறிவிப்பு பலகை: மருத்துவர்களை தாக்கினால் ஜாமீனில் வெளிவர முடியாத மூன்று முதல் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக 2008-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவமனை பாதுகாப்பு தண்டனை சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

 டாக்டர்களை அடித்து காயம் ஏற்படுத்துவது, மருத்துவமனை ஊழியர்களின் உடல் மற்றும் உயிருக்குச் சேதாரம் விளைவிப்பது, பணி செய்ய விடாமல் தடுப்பது, மருத்துவமனை சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கனகசபை கூறியது: "முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கோரிக்கையை ஏற்று மருத்துவமனையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அவர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு மட்டும் ரூ.2 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

 மேலும், மருத்துவமனையில் இப்போது இயங்கி வரும் புறக்காவல் நிலையத்தில் 39 போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இந்த புறக்காவல் நிலையம் முழுமையான காவல் நிலையமாக மாற்றப்படும் என்று சென்னை காவல்துறை ஆணையர் உறுதியளித்துள்ளார்.

 இனி அரசு மருத்துவமனை டாக்டர்கள் முழு பாதுகாப்புடன் தங்களது பணியைத் தொடரலாம் என்றார் கனகசபை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.