புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கசக்கும் விலை; ருசிக்காத உணவு

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனியார் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உணவுப் பண்டங்களின் விலையும் அதிகமாக இருப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:10 am

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனியார் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உணவுப் பண்டங்களின் விலையும் அதிகமாக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் சார்பில் அமைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் மட்டுமே உணவகம் நடத்தப்பட்டது. அந்த உணவகம் மூடப்பட்டு தனியார் உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதே தரம் குறைந்ததற்கு காரணம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். மாணவர் சங்க செயலாளர்: கூட்டுறவுச் சங்கம் சார்பில் உணவகம் நடத்தப்பட்டபோது, அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மாணவர் சங்கத்தின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

உணவகத்தில் நாள்தோறும் தயாராகும் உணவு வகைகள், குறிப்பாக மதிய உணவு மாணவர் சங்கச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் உணவை ருசி பார்த்து அதன் தரத்தை மதிப்பிடுவார். ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக் காட்டுவார். கூட்டுறவுச் சங்க உணவகத்தில் உணவுப் பண்டங்கள் குறைந்த விலையில் அதேசமயம் நிறைந்த தரத்துடன் விற்கப்பட்டன.

தனியாரிடம் உணவகம்: சிறப்பாக செயல்பட்டு வந்த கூட்டுறவு சங்க உணவகம் மூடப்பட்டு 2008-ல் தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்குள் இரண்டு தனியார் உணவகங்களுக்கும், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் வசதிக்காக இரண்டாவது தளத்தில் மற்றொரு உணவகத்துக்கும் அனுமதி தரப்பட்டது.

தனியாரிடம் தாரை வார்க்கப்பட்ட நாளில் இருந்து உணவகங்களில் உள்ள உணவுப் பண்டங்களின் விலையும், தரமும் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஊழியர்களும், பொது மக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

"கூட்டுறவு உணவகத்தில் சாதாரண டீ முதல் சாப்பாடு வரை அனைத்தும் குறைவான விலையில் தரத்துடன் விற்கப்பட்டு வந்தது. இப்போது இரண்டு இட்லி ரூ. 14-க்கும், ஒரு சாப்பாடு ரூ. 30-க்கு அதிகமாகவும், தோசை உள்ளிட்டவை ரூ. 20 முதல் ரூ. 25 வரையிலும் விற்கப்படுகிறது. உணவுப் பண்டங்களின் தரமும் மிகவும் மோசமாக உள்ளது என்கின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும், அவர்களுடன் வருவோரும் வெளியில் இருந்தே உணவுகளை வாங்கிச் சாப்பிடுகின்றனர். நாங்களும் இந்த உணவகங்களில் ஒருபோதும் கை நனைப்பதில்லை' என்கின்றனர் கல்லூரி வளாகத்தில் உள்ள குடிநீர் வடிகால் ஊழியர்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு: கூட்டுறவு உணவகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். உணவகம் மூடப்பட்ட நிலையில் அந்த ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்தப் பிரச்னை தொடர்பாக அவர்கள் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கூட்டுறவுச் சங்கத்துக்கும் கல்லூரி வளாகத்தில் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி- மருத்துமனையின் முதல்வர், வி.கனகசபை கூறியது:

"இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் பதிலை அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் அறிக்கையாக அளித்துள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வேறு கருத்து எதையும் தெரிவிக்க முடியாது. எனினும் உணவகங்களில் தரம் கண்காணிக்கப்படும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.