டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

2 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை பறைசாற்றும் நாணயக் கண்காட்சி

சென்னை, மே 18: வரலாற்று உண்மைகளை பறைசாற்றுவதில் கல்வெட்டுகளைப்போல நாணயங்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.  என்னதான் புத்தகங்கள் மூலம் பண்டைய வரலாற்றை நாம் அறிந்து கொள்கின்றபோதும், அவ்வப்போது புதையல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:21 am

சென்னை, மே 18: வரலாற்று உண்மைகளை பறைசாற்றுவதில் கல்வெட்டுகளைப்போல நாணயங்களும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

 என்னதான் புத்தகங்கள் மூலம் பண்டைய வரலாற்றை நாம் அறிந்து கொள்கின்றபோதும், அவ்வப்போது புதையல்களாகக் கிடைக்கின்ற கல்வெட்டுகள், பண்டைய பொருள்கள் மற்றும் நாணயங்களை நாம் கண்கூடாக பார்க்கின்றபோதுதான் வரலாற்று உண்மைகளை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

 இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம், நாணயக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சி மே 24-ம் தேதி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.

 தமிழகத்தில் புழக்கத்திலிருந்த நாணயங்கள்: இந்தக் கண்காட்சியில் தமிழகத்தில் புழக்கத்திலிருந்த நாணயங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. கி.மு. 300 முதல் கி.பி. 200 வரையிலான சங்க கால சோழர் நாணயங்கள் முதல் 19-ம் நூற்றாண்டின் இந்திய-பிரிட்டன் நாணயங்கள் வரை இடம்பெற்றுள்ளன. மாதிரிகள் மற்றும் விளக்கங்களுடன் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்ற ரோமானிய மற்றும் மகத நாட்டுடனான தமிழகத்தின் வாணிபத் தொடர்புகளையும், சீன நாட்டுடன் சோழர்கள் வைத்திருந்த வாணிபத் தொடர்புகளையும் இந்த நாணயங்கள் தெளிவாக விளக்குகின்றன.

 கி.பி. 1700 வரை இந்தியா வாணிபத்தில் தலைசிறந்து விளங்கியதையும், மிளகு, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களை வாங்க ரோமானியர்கள் தமிழகம் வந்ததையும், அதேபோல சீனர்களும் வாணிபத்துக்காக கடல் வழியாக தமிழகம் வந்தனர் என்பதையும் நாணயங்கள் மூலமும் வரைபடங்கள் மூலம் இந்தக் கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. நாணயங்களில் காணப்படும் அரசரின் உருவம், பட்டப்பெயர்கள், கடவுள் உருவம், சமயச் சின்னங்கள் ஆகியவை அக்காலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த சமயம், மொழி மற்றும் அரசர்களின் வெற்றிகள், மரபு வழி, ஆட்சி எல்லை பரப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிய உதவுகின்றன.

 ஆட்சியாளர்களின் நாணயங்கள்: கண்காட்சியில் 51 வகையான நாணயங்கள் இடம்பெற்றுள்ளன. சங்க கால சோழர் நாணயம் (கி.மு. 300 - கி.பி. 200), மாமன்னர் நீரோ நாணயம் (கி.பி. 54 - கி.பி. 68), சங்க கால பாண்டியர் நாணயம் (கி.பி. 300 - கி.பி. 200), மாமன்னர் ராஜராஜ சோழன் நாணயம் (கி.பி. 985 - கி.பி. 1014) மற்றும் பல்லவர் கால நாணயங்கள், மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் நாணயங்கள், சங்கம் மருவிய காசுகள், விஜயநகர நாயக்க மன்னர் காசுகள், செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1567 - கி.பி. 1575) காசுகள், ஹைதர் அலி நாணயம், மைசூர் உடையார் நாணயம், சேதுபதி நாணயம், மதுரை நாயக்கர் நாணயம், இந்தோ - டச்சு நாணயம், இந்தோ - பிரிட்டன் நாணயம், இந்தோ - பிரஞ்சு நாணயம் என பல்வேறு நாணயங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

 நீண்ட காலம் புழக்கத்தில் இருந்த நாணயம்: இவற்றில் விஜயநகர நாயக்க மன்னர்களின் காசுகள்தான் தமிழகத்தில் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்துள்ளன. அந்த நாணயங்கள் கி.பி. 1330 முதல் கி.பி. 1835 வரை புழக்கத்தில் இருந்துள்ளன.

 இந்த நாணயங்கள் அனைத்தும் தங்கம் மற்றும் செம்பு உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.

 நாணயம் தயாரிக்க பயன்பட்ட உலோகங்கள்: அக்காலங்களில் நாணயங்களை உருவாக்க பெரும்பாலும் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு உள்ளிட்ட உலோகங்களையே பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் கண்காட்சி தெளிவாக விளக்குகின்றது.

 இந்தியாவில் பிரிட்டஷ் ஆட்சி வரை தங்க நாணயங்களும், இரண்டாம் உலகப் போர் முடியும் வரை வெள்ளி நாணயங்களும் புழக்கத்தில் இருந்துள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகும் சில ஆண்டுகள் செப்புக் காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளன.அதன் பிறகு இந்தக் காசுகள் நடைமுறையிலிருந்து நீக்கப்பட்டன. இப்போது இந்தியாவில் துருப்பிடிக்காத ஸ்டீலால் (ஃபெரிடிக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) நாணயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த உலோகத்தை வேறு எந்த பயன்பாட்டுக்கும் உபயோகிக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.