காமராஜர் இல்லத்தை கண்டுகொள்ளாத காங்கிரஸ் தலைவர்கள்

காமராஜர் நினைவு தினமான செவ்வாய்க்கிழமை
Updated on
1 min read

காமராஜர் நினைவு தினமான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 2) காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் காமராஜர் வாழ்ந்த இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தவில்லை.

காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை சத்தியமூர்த்தி பவனிலும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால் அவர் வாழ்ந்து இறந்த நினைவு இல்லத்துக்கு பொதுமக்கள், உறவினர்கள், காமராஜரின் விசுவாசிகள் தவிர வேறு யாரும் வரவில்லை.

சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் அமைந்துள்ளது காமராஜ் நினைவு இல்லம். 1946-ம் ஆண்டு முதல் 29 ஆண்டுகள் அந்த வீட்டிலேயே காமராஜர் வாழ்ந்து இறந்தார். 3 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தபோதும், காங்கிரஸ் கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர் பொறுப்பு வகித்தபோதும் காமராஜர் வாழ்ந்த இல்லம் அது.

காமராஜர் உடல் நலக் குறைவால் 1975-ம் ஆண்டு இறக்கும்வரை வாடகைக்கே அந்த வீட்டில் குடியிருந்தார். அவர் பயன்படுத்திய அத்தனை பொருள்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்புவாய்ந்த அந்த இல்லத்துக்கு காமராஜர் நினைவு தினத்தில்கூட காங்கிரஸ்காரர்கள் யாரும் வருவதில்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரி விக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறியது:

முதல்வராக இருக்கும்போது காமராஜரைப் பார்க்க கட்சிக்காரர்கள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலர் இந்த இல்லத்துக்கு வருவார்கள். உதவி என்று வந்த யாரையும் வெறுங்கையோடு அனுப்பியதில்லை அவர்.

அத்தகைய தலைவன் வாழ்ந்த வீட்டை காமராஜர் ஆட்சி அமைக்க விரும்பும் காங்கிரஸ்காரர்கள் யாரும் வந்து பார்ப்பதேயில்லை. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சில முக்கியப் பிரமுகர்கள் இங்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்கள். அதற்குப் பிறகு யாரும் இந்தப் பக்கம் வரவில்லை.

காமராஜர் வீட்டுக்கு முக்கியத்துவம் இல்லை: இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் இந்த நினைவு இல்லத்துக்கு வந்து தமிழகத்தை ஆண்ட ஏழைத் தலைவர் எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதைத் தெரிந்து கொள்வதில்லை.

இந்த நினைவு இல்லம் குறித்து காமராஜரின் உதவியாளராக கடைசி வரை இருந்த வைரவன் தனது புத்தகத்தில் குறிப்பிடும்போது "இந்த இல்லத்தில் காமராஜர் பயன்படுத்திய பொருள்கள், அரிய புகைப்படங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள் பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு மாபெரும் தலைவரின் நினைவு இல்லத்துக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை' என பதிவு செய்திருக்கிறார்.

யார் வருகிறார்களோ, இல்லையோ காமராஜரை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த இல்லம் கோயில்தான் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் காமராஜரின் விசுவாசிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com