புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு

ரயில்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

News image
Updated On :20 மே 2013, 8:32 pm

ரயில்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதுவும் வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களிலும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் தில்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ரயில் நாக்பூர் ரயில் நிலையம் வந்த போது, இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

பயணிகள், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் அங்கு பெட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. வழியில் உள்ள நிலையங்களிலும் தண்ணீர் பிடிக்கவில்லை.

அந்த ரயில் ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வந்துபோது, எஸ் - 7, 8 மற்றும் 9 எண் கொண்ட பெட்டிகளில் பயணம் செய்தோர், பெட்டிகளில் தண்ணீர் நிரப்பாமல் ரயிலை எடுக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிக்கெட் பரிசோதகர் நிலைய ஊழியர்களிடம் தண்ணீர் நிரப்ப சொல்லியும் அவர்கள் நிரப்ப மறுத்துவிட்டனர்.

இதன் காரணமாக எஸ் - 8 பெட்டியில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால் ரயில்வே அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் நான்கு பெட்டிகளில் மட்டும் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

தென் மாவட்ட ரயில்கள்: அதேபோல செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக கழிப்பறைகள் சுகாதாரமின்றி உள்ளது. போதிய தண்ணீர் இல்லாமல் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் நீண்ட தூரம் பயணம் செய்வதால், மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

அதுபோல் நெல்லை வழியாக செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

குடிநீரும் பற்றாக்குறை: ரயில் நிலையங்களில் மாலையில் குடிநீர் விநியோகம் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குமரியில் இருந்து சென்னை செல்லும் குமரி எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையங்களுக்கு இரவு நேரத்தில் வந்து சேரும்.

அப்போது பயணிகள் பாட்டில்களில் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாட்பாரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை திறந்தால் தண்ணீர் வருவதில்லை. இதனால் பயணிகள் வேறு வழியின்றி ரயில் நிலைய கடைகளில் தண்ணீர் பாட்டில்களை விலைக்கு வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும், வரக்கூடிய தண்ணீரை ஒப்பந்தக்காரர்கள் ரயில் நிலையத்தை சுத்தப்படுத்த பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் பிடிப்பதற்கும், பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் முடியாத நிலை உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

விழிப்புணர்வு வேண்டும்: இந்த பிரச்னை தொடர்பாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரி கூறியது: ரயில்கள் பயணிக்கும்போது தண்ணீர் பிடிப்பதற்கு என்றே சில நிலையங்களில் ரயில்கள் கூடுதல் நேரம் நிறுத்தப்படும். அனைத்து பெட்டிகளிலும் தண்ணீர் நிரப்பப்படும். கோடை காலங்களில் குறிப்பிட்ட நிலையங்கள் வருவதற்கு முன்பாகவே தண்ணீர் தீர்ந்துபோகலாம்.

அப்போது பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கலாம். அவர் அடுத்து வரும் நிலையத்தி தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்து தருவார். பயணிகளும் இந்த விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். பல பயணிகள் ரயிலில் வரும் தண்ணீரை வீணாக செலவு செய்கின்றனர். பல நேரங்களில் குழாயை திறந்துவிட்டு மூடாமல் சென்று விடுகின்றனர். எனவே பயணிகளுக்கும் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.