புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பராமரிப்பின்றி இயக்கப்படும் துரந்தோ ரயில்கள்

சென்னையில் இருந்து கோவை, மதுரை செல்லும் துரந்தோ ரயில் பெட்டிகள் பரமரிப்பின்றி இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், துரந்தோ ரயில்களில் வழங்கப்படும் உணவும் முன்புபோல் இல்லாமல் தரமின்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

News image
Updated On :6 அக்டோபர் 2013, 10:43 pm

சென்னையில் இருந்து கோவை, மதுரை செல்லும் துரந்தோ ரயில் பெட்டிகள் பரமரிப்பின்றி இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், துரந்தோ ரயில்களில் வழங்கப்படும் உணவும் முன்புபோல் இல்லாமல் தரமின்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏராளமான குறைகள் இருப்பதாகவும் அவற்றை ரயில்வே நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சென்னையில் இருந்து தில்லி நிஜாமுதீன், கோவை, மதுரை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு துரந்தோ ரயில் இயக்கப்படுகிறது. துரந்தோ ரயிலின் அனைத்துப் பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். படுக்கை மற்றும் உட்காரும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயிலில் டிக்கெட் கட்டணத்துடன் உணவும் வழங்கப்படும். மேலும் இந்த ரயில் இடையில் எந்த ரயில் நிலையங்களிலும் நிற்காமல் நேராக -பாயின்ட் டூ பாயின்ட்- சேவையாக இயக்கப்படுகிறது.

துரந்தோ ரயில்களில் டிக்கெட் கட்டணம் அதிகம். ஆனால் டிக்கெட் விலைக்கு ஏற்ப துரந்தோ ரயிலின் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது.

பராமரிப்பு குறைகள்: சென்னை சென்ட்ரல் - கோவை - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் துரந்தோ ரயில் ஜனவரி மாதம், 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது இந்த ரயில் 2 ஆண்டுகள் பழமையானதாக மாறிவிட்டது. தொடக்க காலத்தில் அருமையாக பராமரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் இப்போது சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லையாம். உட்காரும் வசதி கொண்ட பெட்டிகளில் நாற்காலிகள் ஆடுகின்றன; குஷன் சீட்டுகள் கிழிந்துள்ளன; பல பெட்டிகளில் உணவை வைத்து சாப்பிடுவதற்கு நாற்காலியின் பின்பக்கம் இணைக்கப்பட்ட சிறியஅளவிலான மேசை உடைந்து காணப்படுவதாக புகார் வந்துள்ளது.

உணவின் தரம்: மேலும் ரயிலில் வழங்கப்படும் உணவும் அதன் தரமும் ஏமாற்றம் தரும் வகையில் இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். பயண நேரத்துக்கு ஏற்ப துரந்தோ ரயிலில் காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் சிற்றுண்டி மற்றும் உணவுகள் வழங்கப்படும். இதற்கான தொகை டிக்கெட்டில் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இந்த உணவு தயாரித்து வழங்கும் பொறுப்புகள் தனியார் கேட்டரிங் ஒப்பந்தக்காரர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தரமில்லாத உணவையே தயாரித்து வழங்குவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை ரயில்வே நிர்வாகம் உடனடியாக கண்காணிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பழைய பெட்டிகள்: சென்னையில் இருந்து மதுரை, திருவனந்தபுரம் இடையே ஓடும் துரந்தோ ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் பழமையானதாகும். இந்தப் பெட்டிகள் வட மாநிலங்களில் 18 ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்பட்டவை என்று கூறப்படுகிறது. மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 1994, 1995-ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டு மேற்கு ரயில்வேயில் ஓடிய 15 பெட்டிகளும், திருவனந்தபுரம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 1996, 1998-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வடக்கு ரயில்வேயில் ஓடிய 16 பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதில் திருவனந்தபுரம் மற்றும் மதுரை ரயிலுக்கான பெட்டிகளில் வெளிப்புறங்களில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக தனியாக வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுவிட்டதால் புதிதாக காட்சியளிக்கின்றன. இந்த 2 துரந்தோ ரயில் சேவைகள் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயக்கப்பட்டது.

பாரபட்சமா? சென்னையில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலே சிறப்பானது என கூறப்படுகிறது. இதில், கழிப்பறை நவீன தொழில்நுட்பத்தில் பராமரிக்கப்படுகிறது. அதன் அனைத்துப் பெட்டிகளும் துருப்பிடிக்காத இரும்பில் செய்யப்பட்டவை. ஆனால் தமிழகத்துக்கு உள்ளே இயக்கப்படும் துரந்தோ ரயிலில் இதுபோன்ற வசதிகள் இல்லை. புதிய பெட்டிகளைக் கொண்டு துரந்தோ ரயில்களை இயக்க வேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கை.

டிக்கெட் கட்டண விவரம்

*சென்னை சென்ட்ரல் - தில்லி நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ரூ.5395, 2-ஆம் வகுப்பு ரூ.3685, 3-ஆம் வகுப்பு ரூ.2690, படுக்கை வசதி பெட்டி ரூ.1120.

*சென்னை சென்ட்ரல் - மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ரூ.2015, 2-ஆம் வகுப்பு ரூ.1185, 3-ஆம் வகுப்பு ரூ.785

*சென்னை சென்ட்ரல் - திருவனந்புரம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ரூ.2855, 2-ஆம் வகுப்பு ரூ.1615, 3-ஆம் வகுப்பு ரூ.1100.

*சென்னை சென்ட்ரல் - கோவை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் எக்ஸிகியூடிவ் வகுப்பு ரூ.1560, சேர் கார் வகுப்பு ரூ.725.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.