சென்னை டாக்டர் கொலை: தம்பதியர் சிறையில் அடைப்பு

சென்னையில் டாக்டர் சுப்பையா வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த தம்பதியர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனர்.

சென்னையில் டாக்டர் சுப்பையா வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த தம்பதியர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனர்.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ்.டி. சுப்பையா. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைமை மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னை அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மருத்துவமனை அருகே அவர் நடந்து சென்றபோது மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். இந்தக் காட்சி, கொலை நடந்த இடத்துக்கு எதிரில் உள்ள தனியார் கட்டட சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டாக்டர் சுப்பையா, 22ஆம் தேதி உயிரிழந்தார். உயிரிழக்கும் முன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ரூ.15 கோடி சொத்து தொடர்பாக தனக்கும், தனது ஒன்றுவிட்ட சகோதரர் பொன்னுசாமிக்கும் (60) பிரச்னை உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகள், டாக்டரின் வாக்குமூலம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, சென்னை தனிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக வழக்குரைஞர் பாசில், அவரது சகோதரர் மோரிஸ் ஆகிய இருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 25ஆம் தேதி சரணடைந்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க, பாசிலின் தந்தை பொன்னுச்சாமி, தாயார் மேரி புஷ்பம் (59) ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் தம்பதியர் சரணடைந்தனர். பிறகு சென்னை தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் இருவரையும், சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராஜலட்சுமி முன்பு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்ப்படுத்தினர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com