கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சோதனை ஓட்டம் கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்படும். இப்போது முதல் கட்டமாக கோயம்பேடு - அசோக் நகர் இடையே கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயிலை சோதனை ஓட்டமாக அதிகாரிகள் இயக்கி பார்த்து வருகின்றனர்.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 24 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப் பாதையிலும், 21 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்டப் பாதையிலும் செல்லும்.
கோயம்பேடு - ஆலந்தூர் வழித்தடத்தில், கோயம்பேடு, புறநகர் பஸ்நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், சிட்கோ, ஆலந்தூர், பரங்கிமலை ஆகிய 8 ரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு தண்டவாளம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சிட்கோ மற்றும் ஆலந்தூர் ரயில் நிலையம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்து ஒரு மாதமாகிறது. இத்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் சில நாட்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, 11 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி கூறியது: கோயம்பேடு அசோக்நகர் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தினமும், பல்வேறு நேரங்களில் நடத்தப்படுகிறது. புதிதாக வந்துள்ள ரயில்களும், பணிமனை சோதனைக்கு பின்பு உயர்மட்டப் பாதையில் இயக்கி பார்க்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தைப் பொருத்தவரை, எந்தத் தேதியில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே சோதனை ஓட்டம் நடத்தப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது. எனினும் இம்மாத இறுதியிலோ அல்லது சில வாரங்களிலோ சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஆனால் நிச்சயமாக அக்டோபர் மாதம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றார் அவர்.
"டிக்கெட் கட்டணம் செப்டம்பரில் அறிவிக்கப்படும்'
சென்னை, ஜூன் 7: சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்பது இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் அக்டோபர் முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்பதில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இருப்பினும் சென்னையில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து வசதிகளான மாநகர பஸ், புறநகர் ரயில், பறக்கும் ரயில் ஆகியவற்றின் டிக்கெட் கட்டணத்தை ஒப்பிட்டு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மேலும் பெட்ரோலியப் பொருள்களின் விலையும் அடிக்கடி உயர்வதால், டிக்கெட் கட்டணத்தை செப்டம்பர் மாதம் முடிவு செய்யலாம் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
உத்தேச கட்டணம்: மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து ஜனவரி மாதம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதன்படி முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.8 கட்டணம் நிர்ணயிக்கலாம் என யோசனை கூறப்பட்டது. அடுத்தடுத்த 2 கிலோ மீட்டர்களுக்கு இந்தக் கட்டணம் உயர்த்தப்படும். 12 கிலோ மீட்டருக்குக்கு கட்டணம் ரூ.17 ஆக இருக்கும். அதிகபட்சமாக 27 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.23 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கட்டணம் நிர்ணயித்த பின்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும்.
வசதிகள்: பயணிகள் எளிதாக டிக்கெட் எடுக்க வசதியாகவும், நெரிசலை குறைக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய டிக்கெட் கவுன்டர்கள், தானியங்கி டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளன. ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தியும் டிக்கெட் எடுக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக ஸ்மார்ட் கார்டை ரீசார்ஜ் செய்யும் வசதியும் ஆன்லைன் வசதியும் கொண்டு வரப்படும்.
உத்தேச பட்டியல்
(ஜனவரி மாதம் ஆலோசித்த வரை)
தொலைவு (கி.மீ.)கட்டணம் (ரூபாயில்)
2 கி. மீ. வரை8
2 முதல் 4 கி.மீ. வரை10
4 முதல் 6 கி.மீ. வரை11
6 முதல் 9 கி.மீ. வரை14
9 முதல் 12 கி.மீ. வரை15
12 முதல் 15 கி.மீ. வரை17
15 முதல் 18 கி.மீ. வரை18
18 முதல் 21 கி.மீ. வரை19
21 முதல் 24 கி.மீ. வரை20
24 முதல் 27 கி.மீ. வரை22
27 முதல் மேல் கி.மி வரை23
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

