மாநிலங்களவை எம்.பி.யாக அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை திமுக வேட்பாளராக இருந்த டி.எம்.செல்வகணபதி, தகுதி இழப்புக்கு உள்ளானதால் அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை இடம் காலியானது. இந்த இடத்துக்கான இடைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு கடந்த 12-ஆம் தேதி வெளியானது.
வேட்புமனுதாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் தனது மனுவை தாக்கல் செய்தார். அனைத்துத் தேர்தலிகளிலும் மனு தாக்கல் செய்யும் கே.பத்மராஜன், பி.என்.ஸ்ரீராமசந்திரன், எம்.மன்மதன் மற்றும் டி.என்.வேல்முருகன் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக மனுதாக்கல் செய்தனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனுதாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் இன்று (ஜூன் 24) காலை 11 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் மனுக்களை ஆய்வு செய்தார். இதில் அதிமுக வேட்பாளரைத் தவிர்த்து மற்ற நான்கு பேரின் மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக ஜமாலுதீன் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நவநீதகிருஷ்ணன் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பை, தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் முறைப்படி வெளியிட்டார். அப்போது நவநீதகிருஷ்ணன் தான் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை, ஜமாலுதீனிடம் பெற்றுக் கொண்டார்.
அதிமுக எம்.பி.க்கள் எண்ணிக்கை: நவநீதிகிருஷ்ணனின் தேர்வு மூலம், மாநிலங்களவையில் அதிமுகவுக்கு மேலும் ஒரு எம்.பி. கூடுதலாகியுள்ளது. ஏற்கெனவே அந்தக் கட்சிக்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். இப்போது, அந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது