மழை, வெள்ளத்தால் மன உளைச்சலுக்கும், அலைக்கழிப்புக்கும் ஆளான பிற பல்கலைக்கழகங்களின் கீழுள்ள கல்லூரிகளில் படித்தவர்கள், தொலைந்துபோன சான்றிதழ்களைப் பெறுவதற்காக ஊர், ஊராகச் சுற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வசிப்பவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே. சென்னையை அண்மையில் மூழ்கடித்த மழை, வெள்ளப் பாதிப்பில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களும் சேதமடைந்தன.
இவர்களில் பெரும்பாலானோர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோôன்மணீயம் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் கீழ் உள்ள கல்லூரிகளில் படித்திருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த சிறப்பு முகாம்கள் பள்ளிச் சான்றிதழ்களைப் பெற குறிப்பிட்ட பள்ளிகளிலும், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புச் சான்றிதழ்களைப் பெற அந்தந்தக் கல்லூரிகளிலும் நடத்தப்படுகின்றன.
இந்த முகாம்களில், சென்னைப் பல்கலைக்கழகம் தவிர்த்த பிற பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் படித்த பெண்ணுக்கு இழந்த சான்றிதழ்கள்: சென்னை மயிலாப்பூரில் புனித எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முகாமுக்கு திங்கள்கிழமை காலை வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாந்திக்கும் இதே சிக்கல் ஏற்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் இழந்துள்ளார்.
இந்த நிலையில், இவரிடம் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுக்கான விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட முகாம் அதிகாரிகள், பட்டப்படிப்பு மறு சான்றிதழுக்கான விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ள முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் தயக்கத்துடன் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், "கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் ஆலோசித்த பிறகே பரிசீலிக்க முடியுமா என்பது தெரியவரும். இதுகுறித்து செல்லிடபேசி மூலம் தகவல் தெரிவிப்போம். படித்த கல்லூரிக்கே செல்ல வேண்டிய சூழலும் ஏற்படலாம்' என்று தெரிவித்தனர்.
இதனால் சாந்தியைப்போல், பிற பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் மறு சான்றிதழைப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
கல்லூரியில் விண்ணப்பிப்பதே சரியானது! இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் சேகர் கூறியதாவது:பட்டப் படிப்பு சான்றிதழ்களைப் பெறுவதற்காக அந்தந்தக் கல்லூரிகளில் முகாம் நடத்தப்படுகிறது. படித்த கல்லூரிகள் அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்தைத் தவிர, பிற பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்கள் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
ஆனால், அவர்கள் சான்றிதழ் நகல் அல்லது பதிவு எண் போன்ற தேவைப்படும் முழு விவரங்களையும் தர வேண்டியிருக்கும். மாறாக, அவர்கள் படித்த கல்லூரிக்குச் சென்று விண்ணப்பிப்பதன் மூலம் எளிதாகவும், விரைவாகவும் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
ஒருங்கிணைந்த முகாமாக மாற்றப்படுமா?
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள், ஒருங்கிணைந்த முகாமாக மாற்றப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர் சாந்தி கூறியது:
பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ் ஆகியன சேதமடைந்துவிட்டன. மழை நின்ற பிறகு வெள்ளத்தால் சேதமடைந்த வீட்டைச் சுத்தம் செய்ய இரண்டு நாள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சான்றிதழுக்காக விண்ணப்பிப்பதற்காக மேலும் ஒரு நாள் விடுமுறை எடுத்துள்ளேன். ஆனால், இங்கு பள்ளிச் சான்றிதழ்கள் மட்டுமே கிடைக்கும் நிலை. பட்டச் சான்றிதழ் கிடைக்குமா அல்லது திருச்சி செல்லவேண்டும் என்ற சூழ்நிலை. இந்த நிலையில் பிறப்புச் சான்றிதழைப் பெற வேறொரு முகாமுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து சாந்தோமைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் கூறியதாவது:
பத்தாம் வகுப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தை மட்டுமே பெற்றனர். ஆதார் அட்டை நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை இங்கு சமர்ப்பிக்க முடியாது எனக் கூறிவிட்டனர். எனவே, ஆதார் அட்டைக்கான முகாமைத் தேடிச் செல்ல வேண்டும் என்றார்.
இவ்வாறாக பலரும் வெவ்வேறு முகாம்களுக்கு தேடி செல்லும் நிலையுள்ளது. எனவே, அனைத்து கல்விச் சான்றிதழ்கள், பிற ஆவணங்களுக்கும் எளிதாக ஒரே இடத்தில் விண்ணப்பிக்கும் வகையில் 4 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 132 முகாம்களை ஒருங்கிணைந்த முகாமாக மாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

