மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணி: சி.ஐ.எஸ்.எஃப்.பிடம் ஒப்படைக்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸாரிடம் உடனடியாக

Published On :

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸாரிடம் உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் திங்கள்கிழமை காலை வழக்குகளை விசாரிக்க நீதிமன்ற அறைக்கு வந்தனர். அப்போது, மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பகத்சிங், அய்யப்பன், சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட 11 பேர் நீதிமன்ற அறை வாயில் முன்பு கருப்புத் துணியை கட்டிக் கொண்டும், கையில் பதாகைகளை ஏந்தியும் நின்றனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்குரைஞர் ஒருவர், ""சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுக்கு இதுவரை தீர்வு ஏற்படவில்லை'' என்று கூறினார்.
 பின்னர் போராட்டக்காரர்களிடம், ""நீங்கள் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்ற அறை இடமல்ல.
 மத்திய, மாநில அரசுகளிடம்தான் நீங்கள் முறையிட வேண்டும்'' என்று நீதிபதிகள் கூறினர். ஆனால், அதை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
 இதையடுத்து நீதிபதிகள் தானாக முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
 போராட்டக்காரர்கள் நீதிமன்ற அறைக்குள் நுழைவதை போலீஸாரால் தடுக்க முடியவில்லை.
 மேலும், இதுபோன்ற போராட்டம் முதல் முறையாக இந்த உயர் நீதிமன்றத்தில் நடைபெறவில்லை. இதுபோன்ற போராட்டங்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் அவ்வப்போது நடைபெறுகிறது. இதுபோன்ற ஆரோக்கியமற்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டவிரோதமாக நீதிமன்ற அறைக்குள் நுழைவதையும் தடுக்க வேண்டும்.
 இது போன்ற செயல்களினால், நீதிமன்றங்களில் பணிக்கு இடையூறு ஏற்படக்கூடாது.
 ஏற்கெனவே உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களின் வளாகத்தில் பாதுகாப்பு குறித்து விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், உயர் நீதிமன்ற வளாகம் என்பது உயர் மட்ட பாதுகாப்பு வளையமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு இதுவரை உருவாக்கவில்லை. பாதுகாப்பு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருங்கிணைந்து உயர்மட்ட பாதுகாப்பை சி.ஐ.எஸ்.எஃப். போலீஸார் மூலம் வழங்குவது அவசியமாகிறது.
 எனவே, தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த வழக்கை நாங்கள் தானாக முன்வந்து பதிவு செய்துள்ளோம். இதற்கு தமிழக தலைமைச் செயலாளர், மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
 இந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை சி.ஐ.எஸ்.எஃப். போலீஸார் அல்லது அதுபோன்ற ஒரு அமைப்பிடம் ஒப்படைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் திங்கள்கிழமை நடந்தது போன்ற, தேவையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதுடன், உயர் நீதிமன்ற பணி சுமுகமாக நடைபெறவும் வழி வகை ஏற்படும் என்று கூறி, இந்த வழக்கை வரும் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.