

முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள சாலையோர வணிகர்களுக்கு இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளும் கடனுதவி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் கேட்டுக் கொண்டார்.
சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியன் வங்கி சென்னை வடக்கு மண்டல அலுவலகம் சார்பில் சிறப்பு முத்ரா தொழில் முனைவோர் கடன் மேம்பாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பேசியதாவது:-
""சென்னையில் சுமார் 35,000 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்களில் தகுதியானவர்களை வங்கிகள் தேர்வு செய்து முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்க வேண்டும்.
பண வசதி இல்லாத ஏழை வியாபாரிகள் தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் பெறுவதைத் தவிர்த்து, குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்ட வங்கிக் கடனுதவியைப் பெற முயற்சிக்க வேண்டும்; கடனுதவி பெற்றோர் உரிய காலத்தில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவேண்டும்'' என்றார் அன்புச்செல்வன்.
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா பேசியது: இந்தியன் வங்கி கடன் பெற தகுதியான அனைத்து தொழில்களுக்கும் உரிய கடன் உதவி வழங்குகிறது என்றார் அவர்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு மக்களவை உறுப்பினர் வெங்கடேஷ் பாபு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தக துறையின் மண்டல இணை இயக்குநர் எஸ்.எம்.கியாஸ், இந்தியன் வங்கி பொதுமேலாளர்(சிறு மற்றும் குறு தொழில்) தலைமை அலுவலகம் கே.சந்திராரெட்டி, இந்தியன் வங்கியின் சென்னை வடக்கு மண்டல பொது மேலாளர் எம். கார்த்திகேயன், துணைப் பொது மேலாளர் எ. சுகுமார் உள்பட பலர் பேசினர்.
ரூ.20 கோடி கடனுதவி: இந்த நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி சென்னை வடக்கு மண்டல அலுவலகம் சார்பில் 552 தொழில்முனைவோருக்கு மொத்தம் ரூ. 20.02 கோடி கடனுதவிக்கான ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.