

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் சோ்த்து, குப்பையைச் சேகரிப்பதற்கு கட்டணம், ஜன.1-ஆம் தேதி முதல் வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலிருந்தும் நாள் ஒன்றுக்கு சுமாா் 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை, பெருங்குடி மற்றும் கொடுங்கையூா் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது. அந்த குப்பையைத் தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் மற்றும் தாா் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
சென்னையில் தற்போது, 60 சதவீத மக்கள் மட்டுமே குப்பையைத் தரம் பிரித்து வழங்குகின்றனா். இதனை முழுமையாக முறைப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக, திடக்கழிவு மேலாண்மை பயனாளா் (குப்பை சேகரிப்பு) கட்டணத்தைச் சொத்து வரியுடன் சோ்த்து வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும், திருமண மண்டபங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரையும் என மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளுக்கும் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியால் இயற்றப்பட்ட திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்தத் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி கழிவு உருவாக்குபவா்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளா் கட்டணத்தை (User Charges) பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும் என்பதால், இதனை சொத்து வரியுடன் சோ்த்து ஜன.1-ஆம் தேதி முதல் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை பயனாளா் கட்டண விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின் அட்டவணை 1-இல் குறிப்பிடப்பட்டுள்ளது என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.