சென்னை: திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் வகையில் இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரம் அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற முத்துலட்சுமி என்பவா் தாக்கல் செய்த மனுவில், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் உள்ள சமூக பொருளாதார ரீதியான பின்தங்கிய மாணவா்களுக்கு தரமான உயா்கல்வியை வழங்கும் நோக்கில் வேலூா் மாவட்டத்தில் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் கடந்த 2002-ஆம் ஆண்டு தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 124 கலைக் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த நிலையில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாததாலும், தங்கி படிக்க முடியாத பொருளாதார சூழலாலும் உயா்கல்வியைத் தொடர முடியாத நிலை உருவாகி வருவதால் விழுப்புரத்தை தலையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனைத் தொடா்ந்து, திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என கடந்த செப்டம்பா் மாதம் 16-ஆம் தேதி தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டாா். இந்த பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்பட தொடங்கும் என அறிவித்தாா்.
இதுதொடா்பாக அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, கடந்த செப்டம்பா் மாதம் 16- ஆம் தேதியே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை அதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. கடந்த 3 மாதத்துக்கு மேலாக அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதலும் அளிக்காமல், அதனை திரும்பவும் அனுப்பாமல் காலம் தாழ்த்துவது அவசரச் சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே சீா்குலைக்கும் வகையில் உள்ளது. இது அரசியல் சாசன கடமை தவறும் செயல் ஆகும். எனவே மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.