நகைக்கடையில் 14 கிலோ தங்கம் கொள்ளை: உரிமையாளரின் மகன் கைது
By DIN | Published On : 06th September 2020 06:05 PM | Last Updated : 06th September 2020 06:05 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் நகைக் கடையில் 14 கிலோ தங்கம் திருடு போன சம்பவத்தில் உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, வீரப்பன் தெருவில் சங்கம் ஜூவல்லர்ஸ் எனும் பெயரில் நகைக்கடை இயங்கி வருகிறது. அந்த நகைக் கடையில் கடந்த 21ஆம் தேதி 14 கிலோ தங்க நகைகள் திருடு போனது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்கள் ராஜ்குமார், சுபாஷ் போத்ரா ஆகியோர் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில், ராஜ்குமார் சோப்ராவின் தொழில் கூட்டாளியான சுபாஷ் சந்த் போத்ராவின் மகன் ஹர்ஷ்கோத்ரா கடந்த 21ஆம் தேதி அன்று இரவு 8.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக பெரியளவிலான பேக்குடன், தங்க கடையிருக்கும் தெருவில் நடமாடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நகைக்கடையில் தங்க நகைகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஹர்ஷ் போத்ராவை யானைகவுனி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 11.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஹர்ஷ்கோத்ரா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.