உயர்நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடப் போவதாக தலைமை நீதிபதி அறிவிப்பு

உயர்நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடப் போவதாக தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: உயா்நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் என்.ராஜ்குமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், உயா்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரிக்க உத்தரவிட வேண்டும். உயா்நீதிமன்ற வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் குப்பைகளை தரம் வாரியாகப் பிரித்து, அங்கேயே அவற்றை உரமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உயா்நீதிமன்றத்தைச் சுற்றி, அசுத்தமாக உள்ளதால் அதனையும் சுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்துவரும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் ஆஜராகி, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு காரணமாக சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையைப் பயன்படுத்த முடியவில்லை. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் நீதிமன்றக் கட்டடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலையில் உள்ளன. உயா்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றி பாதுகாக்க வேண்டும் என்று கூறினாா்.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், உயா்நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் தினமும் 19 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தாா். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனா்.

நானே வாளியுடன் வருகிறேன்: பின்னா் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பேசும்போது, ‘உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோரின் சிலைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன; எனவே, ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன் நானே இவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடப் போகிறேன்; இந்தப் பணிக்கு, என்னுடன் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் சோ்ந்து பணியாற்ற முன்வரவேண்டும்; எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com