சென்னையில் எகிறும் மின் கட்டணம்; குவியும் புகார்கள்

வழக்கமான மின் கட்டணத்தைப் போல அல்லாமல், பல மடங்கு அதிகமான மின் கட்டணம் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகாரளித்துக் கொண்டேயிருந்தாலும், வழக்கம் போல மின் கட்டணம் அதிகமாகவே கணக்கிடப்பட்டு வருகிறது.
சென்னையில் எகிறும் மின் கட்டணம்; குவியும் புகார்கள்
சென்னையில் எகிறும் மின் கட்டணம்; குவியும் புகார்கள்
Published on
Updated on
1 min read

 
சென்னை: வழக்கமான மின் கட்டணத்தைப் போல அல்லாமல், பல மடங்கு அதிகமான மின் கட்டணம் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகாரளித்துக் கொண்டேயிருந்தாலும், வழக்கம் போல மின் கட்டணம் அதிகமாகவே கணக்கிடப்பட்டு வருகிறது.

இது பெரும்பாலும், மின் பயன்பாட்டுக் கணக்கீடு செய்யும் மின்வாரிய அலுவலர்களின் தவறான கணக்கிடலால் மட்டுமே நேர்கிறது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

பொதுவாக மாதந்தோறும் 400 - 500 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வரும் வீடுகளுக்குக் கூட இந்த மாதம் 4,500 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. அது மட்டுமல்ல, புகார் கொடுக்கச் செல்லும் பெரும்பாலானோருக்கு இதே மின் கட்டணம் வந்திருப்பதுதான் அதிர்ச்சிக்குரியதாக உள்ளதாக கூறுகிறார்கள் வாடிக்கையாளர்கள். இது குறித்து புகாரளிக்க மின் வாரியத்தைத் தொடர்பு கொள்ள முயன்றால் அதற்கு பலனேதும் கிடைப்பதில்லை என்றும் புலம்புகிறார்கள்.

வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.6000 மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து புகார் அளித்து, வீட்டுக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், கூடுதலாக 300 யூனிட் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், புதிய பில் இதுவரை வரவில்லை. பழைய கட்டணத்தையும் இதுவரை செலுத்தவில்லை. அபராதம் வசூலிப்பார்களோ என்ற கவலையில் உள்ளார் வீட்டின் உரிமையாளர்.

கடந்த மே மாதம், வீடு வீடாக வந்து மின் கட்டணத்தைக் கணக்கிடாமல் விட்டுவிட்டதால், கடந்த சில மாதங்களில், பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து புகார் கொடுத்த பொதுமக்களுக்கு, கடந்த ஆண்டின் மே மாத கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்கள் மின் வாரிய ஊழியர்கள். 

பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், தங்களது மின் மீட்டர்களின் புகைப்படத்தையும், மின் கட்டணத்தையும் எடுத்து அனுப்பினால், மின் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று விளக்கம் கொடுத்துள்ளது மின் வாரியம். இந்த கரோனா பேரிடர் காலத்தில் மட்டும் ஒவ்வொரு மாதமும் சுமார் 5.4 லட்சம் புகார்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த நான்கு மாதங்களாக எங்கள் வீடு பூட்டப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு ரூ.5 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. மின் வாரிய இணையதளத்தில் புகார் பதிவு செய்த பிறகு, மின் கட்டணம் குறைக்கப்பட்டது என்கிறார் மற்றொரு மின் பயன்பாட்டாளர்.

ஏற்கனவே, பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்கு, இவ்வாறு மின் கட்டண குளறுபடிகள் பெரும் பாரத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

இது குறித்து மின்வாரிய அலுவலர்களைக் கேட்டால், பொதுமக்கள் 94987-94987 என்ற எண்ணில் புகார் அளித்தால், ஒரு வார காலத்துக்குள் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com