மோடி குறித்து விடியோ வெளியிட்டவரை சென்னையில் கைது செய்தது உ.பி. காவல் துறை

பிரதமர் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்ட மன்மோகன் மிஸ்ரா என்பவரை உத்தரப் பிரதேச காவல் துறையினர் சென்னையில் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிரதமர் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்ட மன்மோகன் மிஸ்ரா என்பவரை உத்தரப் பிரதேச காவல் துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

அவரது சமீபத்திய விடியோக்கள் எதுவும் இல்லாததால், அவரது எந்தக் கருத்தின் காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட முடியவில்லை.

இதுபற்றி சென்னை காவல் துறையின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

"மன்மோகன் மிஸ்ரா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் 35 வருடங்களுக்கு முன்பே குடும்பத்துடன் சென்னை மாதவரத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டார். பான் மற்றும் ஆதார் அட்டைகளை வாங்கித் தரும் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார். சமூக ஊடகங்களில் அதிகளவில் செயல்பாட்டில் இருப்பார், யூடியூப்பில் அடிக்கடி விடியோ பதிவேற்றம் செய்வார்.

அவர் விடியோக்களில் ஹிந்தியிலேயே பேசுவதால், உத்தரப் பிரதேசத்தில் அவரது விடியோக்கள் பரவலாகப் பகிரப்பட்டு வந்துள்ளன."

அவரது விடியோவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, காவல் துறையிடம் புகாரளித்திருக்கக்கூடும்.    

இதையடுத்து, கோடாவாலி காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி சென்னை மாதவரத்துக்கு வந்துள்ளனர். உத்தரப் பிரதேச காவல் துறையின் குழு ஒன்று வெள்ளிக்கிழமை மாலை சென்னை வந்து, அவரைக் கைது செய்தது. அவரை உத்தரப் பிரதேசம் அழைத்துச் செல்வதற்கான மாஜிஸ்திரேட் ஆணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் ரயில் மூலம் உத்தரப் பிரதேசம் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது சமீபத்திய விடியோக்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால், கரோனா மற்றும் பொது முடக்க காலங்களில் மக்களுக்குப் பெரிதளவில் உதவிகளைச் செய்யாத காரணத்தினால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று 6 மாதங்களுக்கு முன்பு அவர் கோரிக்கை வைத்த விடியோ உள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காவல் துறையினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com