இந்திய விளையாட்டு வீரர்களின் இருண்ட பக்கங்கள்

இப்போது பரிசுத் தொகைகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கும்  ஹரியாணா அரசு, 2016 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு அறிவித்த ஊக்கத் தொகையையே இன்னும் வழங்கவில்லை. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றும் அதில் கலந்துகொள்ள விளையாட்டு வீரர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் 11 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என பல பதக்கங்களை பெற்றிருந்தாலும் அவருக்கு எதற்காக அனுமதி மறுக்கப்பட்டது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்? அதற்கான பதில்தான் இந்திய விளையாட்டுத் துறை மோசமான நிலையில் இருப்பதற்கான பல்வேறு காரணங்களில் ஒன்று. 

போலந்தில் நடைபெறவுள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றவர்களில் ஐந்து பேரில் ஒருவர் பெண். பெண் என்பதாலேயே தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக சமீஹா பர்வீன் என்ற இவர் குற்றம்சாட்டுகிறார்.

இதுபோன்ற காரணங்களால் வாய்ப்பு மறுக்கப்படுவது இந்தியாவைத் தவிர வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெறாது. சர்வதேச அரங்கில் இந்தியாவால் ஏன் மற்ற நாடுகளுடன் போட்டிபோடக் கூட முடியவில்லை. இதற்கு பல காரணங்கள உண்டு.

ஒலிம்பிக்கில் தேசிய கொடி ஏந்திய பிங்கி கர்மாகரின் நிலை என்ன?

முதல் போட்டியில் கலந்துகொண்டவுடன் அனைவராலும் வெற்றியை ஈட்டிவிடமுடியாது. அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி ரூபாய் ஊக்கத்தொகை, அரசுப் பணி என பல்வேறு பரிசுகளை ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

அதே ஹரியாணாவிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சண்டீகரில், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட ரீது என்ற குத்துச்சண்டை வீராங்கனை, பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் வேலை செய்துகொண்டிருக்கிறார். 

குத்துச்சண்டை வீரர் ரீது
குத்துச்சண்டை வீரர் ரீது

இப்படி, இரண்டு தீவிரமான போக்குகளை இந்தியாவில் மட்டுமே உங்களால் காண முடியும். வெற்றியாளர்களுக்கு மட்டுமே அனைத்தும் என்பதை அரசு முதல் விளையாட்டு அமைப்புகள் வரை ஊக்குவித்துவருகின்றன. பதக்கம் வென்றவர்கள் கோடி கணக்கில் பரிசுத் தொகை பெறுகிறார்கள்.

மற்றவர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் வாழ்ந்துவருகின்றனர். இந்தியா முழுவதும் ரீது போன்ற ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளனர். 2012 ஆம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மூவர்ணக் கொடியைப் பெருமையாக ஏந்தித் சென்ற தடகள வீராங்கனையான பிங்கி கர்மாகர் தற்போது அசாமில் தினக்கூலியாக பணிபுரிந்துவருகிறார்.

தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் அவர் ஒரு நாளைக்கு 167 ரூபாய் ஊதியம் பெறுகிறார். இப்படி, இந்திய விளையாட்டு வீரர்களின் இருள் சூழ்ந்த  பக்கங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு, ஒலிம்பிக் ஜோதியை ஏந்திக்கொண்டு ஓடும் ரிலே போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டவர் பிங்கி கர்மாகர். யூனிசெப் அமைப்பின் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தைப் பள்ளிகளில் நடத்திப்  பெண்களுக்குக் கற்பித்து வந்த பிங்கி கர்மாகர், தற்போது தனது குடும்பத்தை நடத்த சிரமப்பட்டுவருகிறார். அரசு மற்றும் யூனிசெப் அமைப்பின் உதவி கிடைக்காமல் விளையாட்டில் தனது எதிர்காலத்தைத் தொலைத்துள்ளார் கர்மாகர்.

பிங்கி கர்மாகர்
பிங்கி கர்மாகர்

பதக்கம் வென்றவர்களுக்கு அறிவிக்கும் ஊக்கத் தொகையை அரசு வழங்குகிறதா?

சமீஹா பர்வீன், ரீது, பிங்கி கர்மாகர் போன்றோர் எதிர்கொண்ட அதே பாதையில் வந்தவர்தான் நீரஜ் சோப்ரா. இந்தியாவையே பெருமை கொள்ளச் செய்த நீரஜ் சோப்ராவுக்கு உறுதுணையாக இருந்தவர் அவரின் பயிற்சியாளர் உவே ஹான்.

மத்திய அரசு, இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய தடகள கூட்டமைப்பு ஆகியவற்றின் மீது ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்பு இவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். தடகள வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி போதுமானதாக இல்லை என்றும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என ஹான் குற்றம்சாட்டியிருந்தார். 

அதேபோல், சர்வதேச வீரர்களுக்கு அளிக்கப்படுவது போன்று இந்திய  விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு அளிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்திருந்தார். சரி, தோல்வி அடைந்தவர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் மட்டும்தான் இந்த நிலையா என்றால் அப்படியில்லை.

வெற்றி பெற்றவர்களுக்கு அறிவிக்கப்படும் ஊக்கத்தொகைகூட சரியாக சென்று சேருவதில்லை. தற்போது, பரிசுதொகைகளை வாரி வழங்குவதாக அறிவித்துக்கொண்டிருக்கும் ஹரியாணா அரசு, 2016 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு அறிவித்த ஊக்கத் தொகையையே இன்னும் வழங்கவில்லை. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இதுகுறித்து 2019ஆம் ஆண்டு ட்வீட் ஒன்று வெளியிட்டார். அதில், இதுபோன்ற வாக்குறுதிகளை அளித்தால் அரசு அதனை நிறைவேற்ற வேண்டும் அல்லது இப்படிப்பட்ட வாக்குறுதிகளையே அளிக்கக் கூடாது என்றும் பதிவிட்டுள்ளார்.

பஜ்ரங் பூனியாவின் பதிவு
பஜ்ரங் பூனியாவின் பதிவு

பஜ்ரங் புனியாவின் இப்பதிவை ரீட்வீட் செய்த நீரஜ் சோப்ரா, அரசு தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்போதுதான் வீரர்களால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியும் என்றும் தெரிவித்தார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக பதக்கங்கள் வென்றதை இந்தியா கொண்டாடிவரும் அதேசமயத்தில், உதவிகள் வேண்டிப் பல விளையாட்டு வீரர்கள் காத்துக் கிடக்கின்றனர். 

நீரஜ் சோப்ராவின் பதிவு
நீரஜ் சோப்ராவின் பதிவு

கிரிக்கெட்டின் இன்னொரு பக்கங்கள்

மற்ற போட்டிகளுக்குதான் இந்த நிலை என்றால், கிரிக்கெட்டிலும் இதுபோன்று இருள் சூழ்ந்த பக்கங்கள் உள்ளன. 2018 ஆம் ஆண்டு, பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நரேஷ் தும்தா தற்போது தொழிலாளியாகப்  பணியாற்றிவருகிறார். மூன்றாண்டுகளுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த அவரின் தற்போதை ஒரு நாள் ஊதியம் 250 ரூபாய். 

அரசு பணிகளுக்காக விண்ணப்பித்த அவருக்கு மிஞ்சியது தோல்வியே. பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பணி, ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால், இறுதியில் 25 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கியது. பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டை தங்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வர பிசிசிஐ இப்போதுகூடத் தயாராக இல்லை. 

அரசும் விளையாட்டு அமைப்புகளும் செய்திகளில் முதல் பக்கங்களில் வரும் அளவுக்கு பரசுத் தொகையை அறிவிப்பதால் இந்திய விளையாட்டை மேம்படுத்திவிட முடியாது. விளையாட்டை நிலையான வருவாய் ஈட்டும் தொழிலாக மாற்ற வேண்டியது அவசியம்.

அதேபோல், விளையாட்டுத் துறையில் இன்னமும் பல சவால்கள் இருக்கின்றன. பொருளாதார ரீதியாக சந்திக்கும் சவால்களைவிட சமூக அளவிலும் நிறைய பிரச்னைகளை வீரர்கள் சந்திக்கின்றனர். இவற்றைப் பற்றி  ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com